அரசு மருத்துவர்கள் இனி வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது .!! உயர்நீதிமன்ற கருத்தால் கொந்தளிப்பில் மருத்துவர்கள்

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2020, 2:48 PM IST
Highlights

அதே சமயம்,அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இக்கருத்து அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும், அரசு மருத்துவர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் இட மாறுதல் உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வர வேற்கத் தக்கது. என  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.  இது குறித்து அச்சங்கத்தில் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம்:- காலமுறை ஊதிய உயர்வு பதவி உயர்வு வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ,அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் , பொதுமக்களை பாதிக்காமல் பலக் கட்டப் போராட்டங்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 

மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்த ,தமிழக அரசு அதை நிறைவேற்றத் தவறி விட்டது. எனவே,தவிர்க்க முடியாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ,சென்ற ஆண்டு  அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 காலை வரை, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நடத்தினர். அப் போராட்டத்தின் பொழுது ,மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ,அந்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.

 போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது, எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற வாக்குறுதியையும் தமிழக அரசு அளித்தது. ஆனால், அவற்றை எல்லாம் மீறி, 120 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை, அரசு இடமாறுதல் செய்தது. மருத்துவர்கள் ,அவர்கள் பணியாற்றிய துறைகளிலிருந்து , முற்றிலும் மாறுபட்ட வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். மேலும் இயக்கங்களை கடந்தும்  தொலை தூரத்திற்கு மாற்றப்பட்டனர்.பலருக்கு , ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீசும் (17B) அனுப்பப்பட்டது.அனைத்து பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பல முறை தமிழக அரசை கேட்டுக் கொண்ட போதிலும், அரசு அதை ஏற்கவில்லை. 

இந்த இடமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி , சில மருத்துவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இடமாறுதல் உத்தரவுகளையும், இதர பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும், தமிழக  அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இவை வரவேற்கத்தக்கன. சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் இதை மனமாற வரவேற்கிறது. ஆனால், அதே சமயம்,அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இக்கருத்து அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும், அரசு மருத்துவர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. நீதிமன்றத்தின் இக்கருத்து வருத்தம் அளிக்கிறது. 

பழிவாங்கல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இந்த இடமாறுதல் உத்தரவுகளை , தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் .நல்லெண்ண அடிப்படையில்,சுமூக சூழலை உருவாக்கும் வகையில், அரசு மருத்துவர்களின் மன வருத்தத்தை போக்கும் வகையில் ,பழிவாங்கல் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.அரசு மருத்துவர்கள் சங்கங்கங்களின் கூட்டமைப்புத் (FOGDA) தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு கனிவோடு ஏற்க முன்வர வேண்டுமென,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

click me!