
நியூஸ் ஃபாஸ்ட் இணையதளத்தை பின் தொடரும் வாசக நண்பர்களுக்கு நன்றாக நினைவிருக்கும் அந்த பதிவு...இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பற்றி ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதில், காபந்து முதல்வராக வந்தமர்ந்துவிட்டாலும் கூட பன்னீரை போல் எடப்பாடி அடக்கி வாசிக்கவில்லை, மிக தெளிவான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தோம்.
குறிப்பாக ஜெயலலிதா போல் 110 விதியையும் கையிலெடுக்க திட்டமிட்டிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு ’சந்திரமுகியின் அறைக்குள்ளே போன கங்கா தன்னை சந்திரமுகியாவே நினைச்சு நின்னா, மாறினா’ அப்படிங்கிற மாதிரி எடப்பாடியாரும் தன்னை வேட்டி கட்டிய ஜெயலலிதாவாகவே நினைச்சு மாறிட்டார் என்று அந்த பதிவில் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், எடப்பாடியின் சட்டமன்ற செயல்பாடுகளில் சில அதைத்தான் உறுதி செய்கின்றன. அதிலும் குறிப்பாக எடப்பாடி இப்போது செய்திருக்கும் ஒரு விஷயம் அந்த எண்ணத்தை மேலும் வலுவாக்குகிறது.
அதாவது நேற்று சட்டசபையில் எடப்பாடியாரின் கையிலிருக்கும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை தாக்கலானது. இதில் பேசிய எடப்பாடி புதிய பாலங்கள், சாலை மறுசீரமைப்பு, புதிய பள்ளிகட்டிடங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள் என பல நலதிட்டங்களை வாரி வழங்கினார். கூடவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்பதையும் ஹைலைட்ட்டாக அறிவித்தார்.
இந்நிலையில் தனது அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் தன் கட்சியினர் மத்தியில் என்னவிதமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது?, தன் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறார்கள் அவர்கள்? என்பது பற்றிய துல்லிய ரிப்போர்ட்டை தரும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.
தனது செயல்பாடுகளுக்கு மக்கள் மற்றும் கட்சியினரின் ஆதரவு இருந்தால் ஜெயலலிதாவாகும் தனது முயற்சியில் அடுத்த நிலைக்கு போவது என்றும், ஒருவேளை ஆதரவில்லை என்றால் தன் மூவ்களை மாற்றிக் கொண்டு ஆதரவை பெறும் முயற்சியில் இறங்குவது என்றும் முடிவெடுத்துள்ளாராம்.
உளவுத்துறையை இப்படி முதல்வர் தனக்காக உசுப்பியிருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு ஆடிப்போனார்களாம் சீனியர் அமைச்சர்கள். ‘கொஞ்சம் அசந்தா அம்மாவாவே மாறிடுவார் போலிருக்கேய்யா! ராசதந்திரத்துல பின்னுறாரே!’ என்று தங்களுக்குள் கமெண்டிக் கொண்டார்களாம்.
எல்லாம் சரி எடப்பாடி சார், சர்வாதிகாரம் மட்டும் உங்களுக்குள்ளே எட்டிப்பார்த்திடாம இருந்துக்கோங்க.