லஞ்ச புகாரில் சிக்கியவருக்கு பதவியா? - டிஜிபியாக டி.கே.ராஜந்திரனை நியமிக்க ஸ்டாலின் எதிர்ப்பு...

First Published Jun 30, 2017, 4:46 PM IST
Highlights
stalin condemns for tk rajendran as dgp


குட்கா லஞ்சப் புகாரில் சிக்கியவரை தமிழக காவல்துறை தலைவராக நியமிப்பது தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பான், குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி அளிக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருட்களுக்கு அனுமதி அளிக்க தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச புகாரில் சிக்கியவரை தமிழக காவல் துறை தலைவராக நியமிப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.

ரூ.40 கோடி லஞ்ச புகாரில், 3 தேதிகளில் 60 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக, வருமான வரித்துறை ரெய்டில் வெளிவந்துள்ள குட்கா டைரியில் இடம்பிடித்துள்ள தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் டி.கே.ராஜேந்திரனை, அவர் ஓய்வுபெறும் தினத்தன்று தமிழக காவல்துறை தலைவராக நியமித்து தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே தலைகுனிவை தேடித் தந்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குதிரை பேர அதிமுக அரசு. இதன்மூலம், போலீஸ் சீர்திருத்தம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அப்பட்டமாக மீறி, தமிழக காவல்துறையை அலங்கோலமான பாதைக்கு அழைத்துச் செல்லும் குதிரை பேர அதிமுக அரசின் இத்தகைய போக்கிற்கு, திமுக சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

டி.கே.ராஜேந்திரன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தபோது, குட்கா வியாபாரிகள் மூலம் அவருக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற ரூ.60 லட்சம் லஞ்சம் தொடர்பான பிரச்சனையை தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எழுப்பியபோது, இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று முதலமைச்சர் அறிவித்தார். 

அது ஒரு கண்துடைப்பு என்றுகூறி, திமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று குட்கா டைரியில் இடம்பெற்றவரை தமிழக காவல்துறையின் தலைவராக நியமித்துள்ளது வெட்கக் கேடானது என்றும் கூறியுள்ளார். 

click me!