பன்னீரின் உண்மை முகத்தைப் பாருங்கள் - வாட்ஸ் ஆப்பை கலக்கும் பதிவு

 
Published : Jun 30, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
பன்னீரின் உண்மை முகத்தைப் பாருங்கள் - வாட்ஸ் ஆப்பை கலக்கும் பதிவு

சுருக்கம்

Former Cheif Minister If Tamilnadu Mr.Pannerselvam Locked ON Well Issue

அம்மாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டுப் போராடும் புரட்சியாளர் பன்னீர் செல்வத்தின் உண்மை முகத்தைப் பாருங்கள் எனும் தலைப்புடன் வாட்ஸ் ஆப்பை கலக்குகிறது பதிவு ஒன்று.

விவகாரம் இதுதான்...

தேனி மாவட்டம் பெரியகுளம்  டூ தேனி நகரம் செல்லும் சாலையில் இருக்கிறது லட்சுமிபுரம் ஊராட்சி. வறட்சியிலும் நீர்  ஊரும் வளமான பூமி. ஆனால் இந்த ஆண்டு கோடையில் துவங்கிய  குடிநீர் பிரச்னை கடந்த இரண்டு மாதங்களாக லட்சுமிபுரம் மக்களை போட்டு புரட்டுகிறதாம்.

”என்னய்யா நம்மூருக்கு வந்த சோதன? சாமி குத்தம் ஏதும் ஆயிடுச்சா, சோழிய உருட்டிப் பாருங்கப்பே” என்று ஊர் பெருசுகள் புலம்பியிருக்கிறார்கள். ஆனால் ஊர் இளசுகளோ நான்கு நாட்கள் நடத்திய விசாரணையில் இந்த வறட்சிக்கு காரணமே ஓ.பன்னீர் செல்வம்தான் என கண்டறிந்து ஊரார் காதுக்குள் ஓத, இதோ மாஜி முதல்வருக்கு எதிராக வரிந்துக் கட்டிக் கொண்டு நிற்கிறது லட்சுமிபுரம் ஊராட்சி.

வறட்சிக்கும், பன்னீருக்கும் என்னய்யா சம்மந்தம்? என்று கேட்டால் “யப்பே பெரியகுளம் ஊர சுத்தி நம்ம பன்னீரு குறைஞ்சது அயிநூறு (500) ஏக்கர்கள வளச்சு போட்டிருக்காரு. இதெல்லாத்தயும் தன்னோட வீட்டம்மா விஜயலட்சுமி அப்புறம் தன்னோட நண்பருக சுப்புராஜ், சின்னச்சாமி ஆகியவுக பேருலதேம் கிரயம் பண்ணியிருக்காக.

இந்த நிலங்கள்ள வெவசாயம் பண்ற பன்னீரு, அதோட தேவைக்காக எங்க லட்சுமிபுரம் பகுதியில அம்மாம் பெரிய கிணறை தோண்டி,  தண்ணீரை எடுத்து பல கிலோமீட்டர்களுக்கு பைப்புகள போட்டு கொண்டு போறாரு. அந்த கிணறோட சைஸ பாத்தீகன்னா பயந்து போவீக, அப்படியொரு சைஸு.

இவுக இப்பிடி பண்றதால ஊருக்கு நீர கொடுக்குற கிணறுக வறண்டுபோச்சுப்பே. ஏற்கனவே லட்சுமி புரத்து ஆளுக தவிச்ச வாய்க்கு தண்ணியில்லாம காய்ஞ்சு கெடக்குறோம். இந்த நிலையில பன்னீரு சைடுல இருந்து இன்னும் ரெண்டு ராட்சஸ கெணறுகள தோண்டுற வேலையை ஆரம்பிச்சுட்டாகப்பே. இனியும்பொறுத்திருந்தா ஊரு சுடுகாடாகிப்போவும்னு சொல்லிட்டுதாம்பே பொங்கிட்டோம்.

இந்த மாநிலத்தோட முதலமச்சரா சில முறை இருந்தவருக்கு இந்த அடிப்பட கருண கூட இல்லேன்னா எப்பிடி? அதான் அடையாள போராட்டங்கள்ள இறங்கினோம். இப்படி ஊர அடிச்சு உலையில போடுற சோழிய பன்னீரு உடனே நிப்பாட்டலேன்னா நாங்க தொடர்ந்து பெரிய அளவுல போராடுவோம்பே.” என்கிறார்கள் லட்சுமிபுரத்து பெரியவர்கள்.

வருவாய்துறையினரும் பன்னீரின் செயலை குத்திக் காட்டிதான் பேசுகின்றனர். 2014_ல் பன்னீர் முதல்வரா இருந்தப்ப இந்த ராட்சஸ கிணறை தோண்டினார். சி.எம்.மை எப்படி எதுக்கன்னு சொல்லிட்டு அதிகாரிங்க அடக்கமா இருந்துட்டாங்க. 200 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட அந்த கிணத்துல பல அடிக்கு சைடு போர்வெல்லும் போட்டதாலே அக்கம்பக்கத்து கிணறுகளும், ஊராட்சி மன்றத்தின் கிணறும் வத்திப்போச்சு. இதை பன்னீர் செல்வத்துட்ட சொன்னப்ப தன்னோட கிணத்துல இருந்து 25 நாட்களுக்கு ஊராட்சிக்கு தண்ணீர் கொடுத்தார். வறட்சிகாலத்துல இப்படி எடுத்துக்கலாமுன்னு சொன்னார்தான். ஆனா இப்போ தண்ணீர் தரமாட்டேங்கிறாங்க.” என்று புலம்பியிருக்கின்றனர்.

தேனி மாவட்ட கலெக்டர் வரை போயிருக்கும் இந்த விவகாரத்தில்,  விசாரணையை முடித்த பிறகு நடவடிக்கை எடுக்கும் முடிவில் மாவட்ட அதிகாரிகள் இருக்கிறார்களாம்.

பன்னீருக்கு எதிராக கிளம்பியிருக்கும் இந்த லட்சுமி (புரம்)வெடியை அணுகுண்டாக மாற்றி மாநில அளவில் அவரது பெயரை டேமேஜ் செய்து அரசியலில் ஆட்டம் காண வைக்க தினகரனின் அணியான தங்கத்தமிழ்செல்வன் கோஷ்டி தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஊர்க்கூட்டம் போட்டு பேசலாம் எனும் முடிவிலிருக்கும் பன்னீரின் ஆட்களோ “வறட்சிக்கு காரணமானதா சொல்லப்படுற கிணறுகளுக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமுமில்ல. பன்னீரின் நண்பர்களோட கிணறுக அவை. நண்பர்கள் செய்யுற காரியத்துக்கு இவர குத்தம் சொல்றது அடுக்குமா? நியாமமாப்பே! எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துட்டுதேம் இருக்குறாம்.” என்று கொதித்திருக்கிறார்களாம்.

ஆனாலும் இந்த கிணறு விவகாரத்தை பெரிதாய் தோண்டி ’ஒரு ஊராட்சியவே காயவிட்ட இவரா இந்த மாநிலத்த காப்பாத்துவாரு?’ எனும் ரீதியில் பரப்புரை செய்து பன்னீரின் செல்வாக்கை அதில் போட்டு மூடிட முயற்சியை தொடர்கிறது எதிர் தரப்பு.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!