அல்லாடும் தொழிலாளர்கள்.. நூல் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்.. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சசிகலா..

By Thanalakshmi VFirst Published May 20, 2022, 4:36 PM IST
Highlights

பஞ்சுக்கான 11 சதவீத இறக்குமதி வரியை வரும் செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருந்தும் பஞ்சு மற்றும் நூல் விலை குறைந்தபாடில்லை. மத்திய அரசு பஞ்சு மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில் நூல் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து விலை உயர்ந்து வருவது மிகவும் கவலையடைய செய்கிறது. இதனால் திருப்பூரில் பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபடுவோர் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தினர் தற்பொழுது தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து போராடி வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் ஏழு முதல் பத்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கருணாநிதிக்கு சிலை வைக்கும் இடத்திற்கு ஜெயலலிதா ஆட்சியில் பட்டா.!! வழக்கு போட்டவரை தெறிக்கவிட்ட எ.வ வேலு.

மேலும், இந்த நூல் விலை ஏற்றத்தை வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு சிலர் பஞ்சு மற்றும் நூல் பதுக்குவதால் நூல் கிடைப்பதிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்று பஞ்சு மற்றும் நூல் பதுக்கலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த நூல் உற்பத்தியில் 50 சதவீத அளவு நூல் உற்பத்தி தமிழகத்தில் நடைபெறுவதால் இத்தொழிலை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்பொழுது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. பஞ்சுக்கான 11 சதவீத இறக்குமதி வரியை வரும் செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருந்தும் பஞ்சு மற்றும் நூல் விலை குறைந்தபாடில்லை என்று நூல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நூல் தட்டுப்பாடு சரியாகும்வரை நூல் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டும் என்றும் நூல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.எனவே, மத்திய அரசு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றத்தை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பஞ்சு மற்றும் நூல் பதுக்கலில் ஈடுபடுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று சசிகலா கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ஏதேதோ பேசும் அண்ணாமலை.. இந்த பிரச்சனை தெரியலயா.. வறுத்தெடுக்கும் கொங்கு ஈஸ்வரன்.

click me!