ஏதேதோ பேசும் அண்ணாமலை.. இந்த பிரச்சனை தெரியலயா.. வறுத்தெடுக்கும் கொங்கு ஈஸ்வரன்.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2022, 3:36 PM IST
Highlights

நூல் விலையை கட்டுபடுத்தி ஜவுளித்துறையை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் எடுத்துக் கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளை பாராட்டுகின்றோம் என கொங்கு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன்  தெரவித்துள்ளார்.

நூல் விலையை கட்டுபடுத்தி ஜவுளித்துறையை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் எடுத்துக் கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளை பாராட்டுகின்றோம் என கொங்கு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன்  தெரவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

வரலாறு காணாத நூல் விலை ஏற்றத்தின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித்துறை மோசமான சூழ்நிலைகளை சந்தித்து கொண்டிருப்பதை எல்லோரும் அறிவார்கள். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட ஜவுளி துறையினர் வேலை நிறுத்தத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். மீண்டும் 15 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான பேர் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 5 மாதங்களாக ஒன்றிய அரசிற்கு கடிதங்களை எழுதி கொண்டிருக்கிறார். நானே நேரடியாக டெல்லி சென்று ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரிடம் நூல் விலை ஏற்றம் சம்பந்தமாக பேசியும் வந்திருக்கின்றேன். தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதித்து இருக்கின்றேன். 

முதலமைச்சர் அவர்கள் டெல்லி சென்றபோது நேரடியாக அமைச்சர்களிடத்திலே நூல் விலை ஏற்றத்தை பற்றி பேசி வலியுறுத்தி வந்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களின் தலைமையில் கொங்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நிதியமைச்சர் அவர்களையும், ஜவுளித்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து முறையிட்டு இருக்கின்றார்கள். நிதி அமைச்சர் கடந்த மாதம் தமிழகம் வந்தபோது ஜவுளித் துறை சார்பாக உண்மை நிலையை எடுத்துச்சொல்லி தீர்வு காண வலியுறுத்தியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசி இருக்கின்றார். 

இவ்வளவு முறையிட்ட பிறகும் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் மவுனம் காப்பது வேதனையாக இருக்கிறது. தினசரி பல விஷயங்களை பற்றி பேசுகின்ற தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. தமிழக பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் நூல் விலை ஏற்றம் தமிழகத்தில் முக்கியமான பிரச்சனையாக தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு தெரியவில்லையா. இந்த விஷயத்தில் நூல் விலை ஏற்றத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டிருக்கின்ற தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழக ஜவுளி துறையின் சார்பாக பாராட்டுகின்றோம். முதலமைச்சருடைய முன்னெடுப்பு நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து ஜவுளித்துறையை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.
 

click me!