முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி.. மீண்டும் சூடுபிடிக்கும் குட்கா ஊழல்..!

By vinoth kumarFirst Published Jul 23, 2022, 2:00 PM IST
Highlights

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், பி.வி. ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், பி.வி. ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

சென்னை செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இவர்கள் பெயர்களுடன் வேறு சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால்துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்.. உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் விசாரித்தனர். பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த சம்பத் ஆகியோரின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர், குட்கா வியாபாரி மாதவராவ், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியிருந்தது.

இதையும் படிங்க;-  என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா  மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ-க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.

click me!