எங்களால் திமுக ஜெயித்தால்?.... விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கொடுத்த நெத்தியடி பதில்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 9, 2021, 3:20 PM IST
Highlights

இந்த தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வராத திமுக, எங்களால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகிழ்ச்சி என்றும் தெரிவித்து அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
 

​தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 

23 தொகுதிகளை கேட்ட நிலையில், இறுதி வரை அதிமுக உடன்படாததால் கூட்டணியில் இருந்து விலகியதாகவும், தனித்து போட்டியா? என்பது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியதை அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

அதேபோல் ​, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசுகையில்;- அதிமுகவுக்குதான் இனி இறங்கு முகம். அதிமுகவின் தலைமைதான் சரியில்லை. யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தேமுதிகவினர். தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். தேமுதிகவிடம் 10,12 என தொகுதிகளுக்கு பேரம் பேசுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் கேப்டனுக்கு அதிமுக துரோகம் செய்தது. 

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். சாதியை பற்றி எனக்கு தெரியாது.  அப்படி பேசினால் நான் முட்டாளாகவே இருப்பேன். நமக்கு தெரிந்த ஒரே சாதி தேமுதிக தான். சாணக்கியனாக இருந்தது போதும் இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது என ஆவேசமாக பேசினார். 

மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜய பிரபாகரன், நாங்கள் அதிமுகவை உச்சத்தில் வைத்து பார்த்தோம், ஆனால் அவர்கள் எங்களை கீழே தள்ள நினைத்தார்கள். அதனால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று கூறினார். உடல் நலமில்லாவிட்டாலும் நல்லது செய்ய வேண்டும் என விஜயகாந்த் நினைக்கிறார். எனவே மக்கள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் எனத் தெரிவித்தார். இந்த தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வராத திமுக, எங்களால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகிழ்ச்சி என்றும் தெரிவித்து அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

click me!