இன்னைக்கு தான் தீபாவளின்னு சொன்ன சுதீஷ்... பட்டாசு வெடித்து கொண்டாடும் தேமுதிக தொண்டர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 9, 2021, 2:38 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், இன்று தான் தேமுதிகவினருக்கு தீபாவளி என்றும் ஆவேசத்துடன் கூறினார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது. 

அதிமுக கூறும் தொகுதிகளை தேமுதிக ஏற்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விஜயகாந்த் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக  முதலில் 41 தொகுதிகளைக் கேட்ட நிலையில், பின்னர் 25 தொகுதிகள் வரை இறங்கி வந்தனர். ஆனால், தேமுதிகவிற்கு 13 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியையும் தர அதிமுக முன்வந்ததாக கூறப்பட்டது.  ஆனால் மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாதை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.கே.சுதீஷ், கேட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்தாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், இன்று தான் தேமுதிகவினருக்கு தீபாவளி என்றும் ஆவேசத்துடன் கூறினார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிடும் என நம்பி அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், முழங்கங்களை எழுப்பியும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
 

click me!