வேட்பாளர் தேர்வு..! வசூல் வேட்டையை தொடங்கிய பிரதான கட்சிகள்..! களை கட்டும் தேர்தல்..!

By Selva KathirFirst Published Feb 18, 2021, 12:05 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கல்லா கட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கல்லா கட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

திமுக, அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை இறுதி செய்யும் போது மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை இரண்டு கட்சிகளின் மேலிடமும் கேட்கும். அதோடு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிடும். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தங்கள் ஆளுமைக்கு உட்பட்ட தொகுதிகளில் மூன்று வேட்பாளர்களை பரிந்துரைப்பார்கள்.

இந்த வேட்பாளர்களின் பின்புலம் குறித்து திமுக, அதிமுக கட்சிகளின் மேலிடம் தீவிர விசாரணை நடத்தும். ஆளும் கட்சி என்றால் உளவுத்துறை இந்த விசாரணையை கையில் எடுக்கும். விசாரணையின் முடிவில், வேட்பாளர்களை தேர்வு செய்வது திமுக, அதிமுகவின் வழக்கமான நடவடிக்கை. அந்த வகையில் தற்போது வேட்பாளர் தேர்வுக்கான பணிகளை இரண்டு கட்சிகளுமே தொடங்கிவிட்டன. அந்த வகையில் மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட தொகுதிகளில் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்று ஒரு தொகுதிக்கு மூன்று பேரை பரிந்துரை செய்ய தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் மாவட்டச் செயலாளர்கள் மூலமே வேட்பாளர் தேர்வு நடைபெறும். எனவே மாவட்டச் செயலாளர்கள் தற்போது வேட்பாளர் பரிந்துரைப்பணிகளில் தீவிரமாகியுள்ளனர். கட்சிக்கு நீண்ட காலமாக உழைப்பவர்கள் கோட்டாவில் ஒரு சிலரை பரிந்துரைப்பட்டியலில் மாவட்டச் செயலாளர்கள் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். மற்றபடி பசையுள்ள பார்ட்டிகள் என்று சிலரை கணக்கெடுத்து அவர்களுக்கு எம்எல்ஏ ஆசை காட்டி வருகின்றனர். மேலும் சிலரோ எம்எல்ஏ ஆகும் கனவுடன் மாவட்டச் செயலாளர்கள் வீடுகளை சுற்றி வர ஆரம்பித்துள்ளனர்.

இப்படி வருபவர்களின் பெயர்களை கட்சிமேலிடத்திற்கு பரிந்துரைக்க ஒரு ரேட், கண்டிப்பாக சீட் வாங்கித் தருவது என்றால் ஒரு ரேட் என்று பேரம் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும்என்றால் பெயரை பரிந்துரைத்தால் போதும் என்றார் ஒரு கோடி ரூபாயும், கண்டிப்பாக சீட் வேண்டும் என்றால் 2 கோடி ரூபாயும் மாவட்டச் செயலாளர்கள் ரேட் பிக்ஸ் செய்திருப்பதாக சொல்கிறார்கள். இது மாவட்டச் செயலாளருக்கு தனியாக கொடுக்க வேண்டிய தொகை என்றும் இது தவிர கட்சி மேலிடத்திற்கு என்று ஒரு தொகை, வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் செலவு செய்யத் தேவையான தொகை என்று ஒரு மெகா பட்ஜெட் போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மாவட்டச் செயலாளர்களிடம் எம்எல்ஏ கனவில் உள்ளவர்கள் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். போதுமான அளவிற்கு வாங்கிய பிறகு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பரிந்துரை கடிதங்களுடன் சென்னைக்கு பறந்து வருவார்களாம்.

click me!