தமிழகத்தில் 3வது அணி..! பேச்சுவார்த்தையை துவக்கிய கமல்ஹாசன்..!

By Selva KathirFirst Published Feb 18, 2021, 11:57 AM IST
Highlights

தமிழகத்தில் 3வது அணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் 3வது அணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது. அத்தோடு வாக்கு வங்கி அடிப்படையில் 3வது பெரிய கட்சி என்கிற பெயரையும் எடுத்தது. அதிலும் குறிப்பாக நகர்புறங்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கு மக்களின் ஆதரவு கணிசமாக  இருந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத கமல் அப்போது முதல் தனது அரசியல் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக எடுத்து வைக்க ஆரம்பித்தார். நாடாளுமன்ற வாக்கு வங்கியை காட்டி சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கூட்டணியில் பெற வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார்.

இதனால் தான் வேலூர் எம்பி தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் போன்றவற்றை கமல் புறக்கணித்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் பிரதான தலைவர்கள் துவங்குவதற்கு முன்னரே கமல் தொடங்கினார். வழக்கம் போல் நகர்ப்பகுதிகளில் கமலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கமல் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடியது. அதோடு இளம் வாக்காளர்கள் மற்றும் நகர்பகுதி வாக்காளர்கள் கமலுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என பேச ஆரம்பித்தனர்.

இதனால் சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி சேர திமுக ஆர்வம் காட்டியது. கூட்டணி தொடர்பாக சில சுற்று பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இறுதியில் கமல் கட்சிக்கு 14 முதல் 21 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்று திமுக தலைமை முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து தனது பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு கமல் வீட்டிற்கு ஓய்வெடுக்க திரும்பிவிட்டார். விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை துவங்கும் என்று கமல் தரப்பிற்கு திமுக தலைமை வாக்குறுதி அளித்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் சொல்லியபடி பேச்சுவார்த்தை துவங்கவில்லை.

இதற்கிடையே கமல் கட்சியை கூட்டணியில் சேர்க்க வேறு சில கூட்டணி கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததாக சொல்கிறார்கள். அதோடு திமுக மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களும் கமல் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இதனை அடுத்து கமல் – திமுக கூட்டணி அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் டென்சன் ஆன கமல் தற்போது 3வது அணி அமைக்கும் பணியில் இறங்கியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு இல்லாத கட்சிகளை ஒன்று சேர்த்து கூட்டணி அமைப்பது என்கிற முடிவிற்கு கமல் வந்துள்ளார். அதன்படி முதல்கட்டமாக டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

விரைவில் வேறு சில கட்சிகளுடனும் கமல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறுகிறார்கள். இதற்கிடையே அமமுக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். அவரும் கூட்டணிக்கு பலமான கட்சிகளை தேடி வருகிறார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் – அமமுக கூட்டணி பேச்சுவார்ததை விரைவில் தொடங்கலாம் என்கிறார்கள்.

click me!