தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று கூறியுள்ளார் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன்.
பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டி படுகொலை கொல்லப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஏப்ரல் 21-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது திமுக அரசு. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்" என்றார்.
ஆனால், அவர் பேசி முடித்த நான்கு நாட்களுக்குள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், அவரது அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க. முடியாது. மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால்தான் கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்டுள்ளார் என்று வரும் செய்திகள், தமிழகத்தில் எந்த அளவுக்கு மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மணல், கற்கள் போன்ற கனிமங்கள் தங்கத்தைவிட மதிப்பு மிக்கதாக மாறியிருக்கின்றன. எனவே, மணல் உள்ளிட்ட கனிம வளங்களுக்காக எதையும் செய்ய, அந்த வணிகத்தில் உள்ள மாஃபியாக்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் படுகொலையே உதாரணம். மணல் கொள்ளையர்களுடன் அதிகார வர்க்கம் கூட்டணியில் உள்ளது. அதனால் தான், லூர்து பிரான்சிஸ் போன்ற நேர்மையான அரசு அலுவலர்கள் தங்களது உயிரையும் இழக்க நேரிடுகிறது.
கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், இட மாறுதல் கோரி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு மணல் கொள்ளை நடந்து வரும் பகுதியிலேயே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இதையும் படிங்க..அவரே வந்துட்டாரா.! கிறிஸ்துவ சமூக ஓட்டு இனி பாஜகவுக்கு தான்.. கேரளா விசிட்டில் சிக்சர் அடித்த மோடி!!
லூர்து பிரான்சிஸை படுகொலை செய்த கொடியவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழக அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அதில் கோட்டை விட்டுவிட்டால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள். இதனை உணர்ந்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க..இப்படியா பண்றது.! பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் எம்.பி..!