
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும் விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் வேண்டப்பட்டது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு மாஸ்க் அணிவித்து, சிலை அருகில் ரஃபேல் போர் விமானம் மற்றும் மத்திய அரசின் சாதனைகள் விளக்கும் வாசகங்களை வைத்தும் விநாயகரை வழிபட்டனர். இதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- எளிமை முறையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் போவதாக சொன்னார்கள். அதன்படி இன்று பல்வேறு இடங்களில் விநாயக சதுர்த்தி கொண்டாப்பட்டு வருகிறது. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தி விழாவில் எஸ்.பி பாலசுப்ரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும் விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்தோம்.
மேலும், திமுகவால் தொடர்ச்சியாக புண்படுத்தப்பட்டு வரும் இந்துக்களின் மத உணர்வு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு வரவேற்றுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை மறுப்பது நவீன தீண்டாமை என்று குற்றம்சாட்டினார். நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்துவதில் மாணவர் நலனைக் கருத்தில் கொண்டும், சூழலைப் பொறுத்தும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதுள்ளது என எல்.முருகன் கூறியுள்ளார்.