இந்துக்களின் மத உணர்வு வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்..!! திமுகவை எச்சரித்த எல். முருகன்..

By Ezhilarasan BabuFirst Published Aug 22, 2020, 11:55 AM IST
Highlights

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி ஆகியோர் விரைவில் குணமடையவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறவும் விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார்.

திமுகவால் தொடர்ச்சியாக புண்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாட்டு இந்துக்களின் மத உணர்வு வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 370-வது சட்டப்பிரிவு ரத்து, மீனவர் காப்பீடு, மேக் இன் இந்தியா உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை வலியுறுத்தும் விதமாக வைக்கப்பட்டிருந்த விநாயகரின் சிலைக்கு, வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜை செய்தனர். 

பூஜையில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி ஆகியோர் விரைவில் குணமடையவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறவும் விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார்.

திமுகவால் தொடர்ச்சியாக புண்படுத்தப்பட்டு வரும் இந்துக்களின் மத உணர்வு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேசிய முருகன், முதலமைச்சர் பழனிசாமியே ஒரு சிறந்த ஆன்மீகவாதி என்றும், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதில் தமிழக அரசு சரியான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறினார். 

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு வரவேற்றுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை மறுப்பது நவீன தீண்டாமை என்று குற்றம் சாட்டினார். இறுதியாக பேசிய முருகன், நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்துவதில் மாணவர் நலனைக் கருத்தில் கொண்டும், சூழலைப் பொறுத்தும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

click me!