
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எதிர் கோசம் எழுப்பினர்.இதனால் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் கடந்த 4வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை செய்தார். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரங்களில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்.
இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !
அப்போது பேசிய அவர், ‘அதிமுக என்பது மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அற்புதமான இயக்கம். ஏழை, எளிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். அதன்பிறகு புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் கட்டிக் காத்தார்கள். அவரது மறைவிற்கு பின்னால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதிமுகவில் ஒருகாலத்தில் இருந்தவன் என்ற முறையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமும், எனது கட்சியின் எண்ணமும் கூட.
ஜெயக்குமாரை பொறுத்தவரை நான் மதிக்கக் கூடிய தலைவர். மிக முதிர்ந்த ஒரு அரசியல்வாதி. அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் அவர்களின் இயக்கம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக நான் தெரிவிக்கிறேன். போஸ்டர் மோதல்கள் என்பது உட்கட்சி பிரச்சினை. அதைப் பற்றி பேச விரும்பவில்லை. அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம்’ என்று பேசினார்.
இதையும் படிங்க : ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?