
புதுச்சேரியில் மொத்தம் 33 சட்டசபை உறுப்பினர்கள் பதவி உள்ளன. அதில் 30 எம்எல்ஏக்கள் நேரடியாகத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள மூன்று பேரை மத்திய அரசு நியமனம் செய்யும். தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், வி வி ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் ஆகியோரை மத்திய அரசு அறிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதித்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், புதுவை முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்காத நிலையில் 3 நியமன நிர்வாகிகளை நியமிக்க எந்த அவசரமும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்எல்ஏக்களும் தலைமைச் செயலாளர் மற்தும் துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரையை வழங்கும் எனவும், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான உத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.