முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பாஜக எம்.எல்.ஏ...! கை தட்டி வரவேற்ற திமுக

By Ajmal KhanFirst Published Apr 25, 2022, 1:01 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி பாராமல் அனைத்து தொகுதிகளுக்கும் சிறப்பான முறையில்  திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக  பாஜக சட்ட மன்ற கட்சி  தலைவர்  நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

திருநெல்வேலியில் கல்லூரி

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று வனத்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. முன்னதாக நடைபெற்ற  கேள்வி நேரத்தின் போது பாஜக சட்டபேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி அமைப்பது தொடர்பான கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23  ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதை தவிர 1 அரசு பொறியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் மற்றும் 1 அரசு உதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரியும், 14 சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன என கூறினார். 

 முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நயினார்

இந்த கல்லூரிகள் தொகுதி மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்வதால், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய பாஜக சட்டபேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இந்த கேள்வி நமது அரசு வந்த உடன் முதல் முதலில் போடப்பட்டு அதை உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்தார். அதற்கு நன்றி. ஏற்கனவே நன்றி சொல்லிட்டேன், இரண்டாம் முறை நன்றி சொல்கிறேன். அதே போல் திருநெல்வேலி நெல்லை அப்பர் கோயிலுக்கு 30 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் அறிவுறுத்தல் பெயரில் அறநிலை துறை அமைச்சர் திட்டங்கள் கொடுத்துள்ளார். அதே போல் நெடுஞ்சாலை துறை அமைச்சர் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி புறவழிச் சாலை சாலை வெகு விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் முதலமைச்சர் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நிலையம் 18 கோடி ரூபாய் திருநெல்வேலி-யில் அமைத்து தரப்படும் என தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து கட்சி பாராமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு திட்டங்கள் தரும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பாராட்டி பேசினார். இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கை தட்டி வரவேற்றனர்.
 

click me!