பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் போக்கு நெடுங்காலம் நீடிக்காது என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டின் அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பத்தை பாஜகவினர் அமைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் கொடுக்கம்பத்தை வைத்ததாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே இந்த சம்பவத்தை அறிந்த பாஜகவினர் குவிந்தனர். இதனால், பதற்றமான சூழல் உருவானதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- கொடிக்கம்பம் அகற்றம்.. அண்ணாமலையின் ஆளுமையும், பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுக அஞ்சுகிறது.. நாராயணன் திருப்பதி
இதனால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடிகளை பாஜகவினர் உடைத்தனர். மேலும், காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆபாசமாகப் பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு நவம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி கைதுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்;- தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அவர்களையும், தமிழக நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதையும் படிங்க;- இது நல்ல செய்தி அல்ல.. வரப்போகும் ஆபத்தின் அறிகுறி.. அரசை எச்சரிக்கும் வானதி சீனிவாசன்..!
ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.