நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவிற்கு வாக்குகள் கேட்டு அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படத்துடன் போஸ்டர் தயாரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக- பாஜக கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இருந்த போதும் அதிமுகவிடம் தொடர்ந்து பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அதிமுக தரப்போ பாஜகவுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் மாற்றமில்லையென கூறிவிட்டது.
பாஜகவை கிண்டல் செய்த அதிமுக
இந்தநிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருந்தார். இதற்கு அரசியல் விமர்சகர்கள் அதிமுகவின் ஓட்டுக்களை கவர்வதற்காகவே மோடி இப்படி பேசியுள்ளதாக கூறியிருந்தனர். இதனையடுத்து புதுச்சேரி பாஜகவினர் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படம் இடம்பிடித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்களை போஸ்டரில் வைத்ததற்கு பாஜக வெட்கப்படவேண்டும் என தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பா ஜ க தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது என கூறியிருந்தார்.
பாஜக நிர்வாகிகள் நீக்கம்
இதனையடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போட்டோ போட்டு போஸ்டர் தயாரித்த பாஜகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புதுவை பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைமையின் அனுமதி இன்றி செயல்பட்ட விஜய பூபதி, ராக் பேட்ரிக், பாபு ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ராகுல் காந்தி யாத்திரையில் 'மோடி மோடி' என்று முழக்கமிட்ட பாஜக தொண்டர்கள்!