மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாரயம் விற்பனை செய்த முக்கிய குற்றவாளியான பாஜக நிர்வாகி விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளச்சாரய மரணம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் மருத்துவமனையிலும் அடுத்தடுத்து 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கள்ள சாராயம் ஒழிப்பு பணி தீவிரம் காட்டப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள கள்ள சாரயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது..
பாஜக நிர்வாகி கைது
இந்தநிலையில் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்து செங்கல்பட்டு மற்றும் மரக்காணத்தில் கள்ளச்சாரயத்தை விற்பனை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், ஆறுமுகம், முத்து, ரவி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான செங்கல்பட்டு மாவட்ட தெற்கு பாஜக ஓபிசி அணியின் செயலாளராக இருக்கும் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரிடம் இருந்து 138 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பாஜகவிலிருந்து விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்