போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடருவாரேயானால், நியாயமான விசாரணை எப்படி நடக்கும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வழக்கில், சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று, தமிழகக் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி,
வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
லஞ்சம் வாங்கி, மோசடி செய்ததாக, அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர், வாங்கிய லஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் 30.7.2021 அன்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய எல்லா முகாந்திரங்களும் இருந்தும், தமிழக அரசு அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது என்றும்,
அமலாக்கத்துறை விசாரணை
ஊழல் என்பது அரசுக்கும் சமூகத்திற்கும் எதிரானது, அதனை அனுமதிக்க முடியாது என கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது என்றும் வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது. திமுக அரசில் அதிகாரமிக்க அமைச்சராக வலம்வரும் செந்தில் பாலாஜியை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற, தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. தன் மீது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடருவாரேயானால், நியாயமான விசாரணை எப்படி நடக்கும்? சட்டவிரோதப் பணப் பரிமாற்ற மோசடி நடந்திருப்பதால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்திருந்தது.
எப்படி நேர்மையாக விசாரணை நடக்கும்
ஆனால், அந்த விசாரணையில் உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து இரண்டு மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பதவியில் இருந்து நீக்குக
மேலும், அமலாக்கத் துறையின் மேல் முறையீட்டு மனுக்களையும் அனுமதித்துள்ளது. தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான ஊழல் தடுப்பு விசாரணை, நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்