பிஜேபி ஆபிஸில் ஸ்டாலின் !! கலைஞர் விழாவில் அமித்ஷா… புதுக் கூட்டணியா ?

By Selvanayagam PFirst Published Aug 23, 2018, 7:34 PM IST
Highlights

சென்னையில் வரும் 30 ஆம் தேதி தெற்கிலிருந்து உதித்த சூரியன் கலைஞர் நினைவேந்தல்  நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இன்று காலை ஸ்டாலின் பாஜக அலுவலகத்துக்கு சென்று வாஜ்பாயி அஸ்தி கலசத்துக்கு  அஞ்சலி செலுத்தினார். இந்த இரு நிகழ்வுகள் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்ட திமுக – பாஜகவுக்கு இடையே புதுக் கூட்டணியை உருவாக்கியுள்ளதா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக திமுக – பாஜக இடையே சுமூகமான உறவு இல்லை. திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இருந்து வந்தது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்ந்து இருந்து வந்தாலும் 2ஜி வழக்கில் திமுகவை அக்கட்சி கைகழுவிவிட்டது.

இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியயோர் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் சிபிஐ நீதிமன்றத்தில் மிகச் சிறப்பாக வாதாடி 2ஜி வழக்கில் இருந்து ராசாவும், கனிமொழியும் விடுதலை ஆகினர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என திமுக தொண்டர்கள் விரும்பினர்.  ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் அதற்கு முட்டுக்கட்டை போட்டதால் திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே  தொடர்ந்தது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி கருணாநிதி மறைந்தார். அவரது மறைவுக்கு நேரடியாக சென்னை வந்த பிரதமர் மோடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதே போன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவின்போது ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி சென்று வாஜ்பாயி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வுகள் பாஜக – திமுக இடையே ஒரு இணக்கமான சூழலை உருவாக்கியுள்ளதாக பொது வெளியில் பேசப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுவதற்காக சென்னை கொண்டு வரப்பட்டு கமலாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் ஆளாய் கமலாலயம் சென்ற ஸ்டாலின் வாஜ்பாயி அஸ்தி கலசத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கனிமொழியும் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே சென்னையில் வரும் 30 ஆம் தேதி தெற்கிலிருந்து உதித்த சூரியன் கலைஞர் என்ற நினைவேந்தல்  நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்வுகளும் திமுக – பாஜக இடையே ஒரு புதிய உறவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

click me!