மீண்டும் அசத்திய பினராயி விஜயன் !! கொச்சி தேவசம் போர்டுக்கு 7 தலித்துகள் உட்பட பிராமணரல்லாத 54 பூசாரிகள் நியமனம்…..

By Selvanayagam PFirst Published Oct 28, 2018, 6:28 AM IST
Highlights

கொச்சி தேவசம்போர்டு வரலாற்றில் முதன்முறையாக 7 பட்டியலினத்தோர் உட்பட பிராமணர் அல்லாத 54 பூசாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த துணிச்சலான நடவடிக்கை அம்மாநில மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேரளாவில் பணியாளர் தேர்வுக்கு இணையான ஒஎம்ஆர் தேர்வும், நேர்முகத்தேர்வும் நடத்தி பூசாரி பணியிடங்களுக்கான நியமனப் பட்டியலை தேவசம் பணியாளர் தேர்வு வாரியம் தயாரித்தது. ஊழலுக்கு இடமளிக்காத தகுதி பட்டியலும், இட ஒதுக்கீட்டு பட்டியலும் சரிபார்த்து நியமன பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

மொத்தம் 70 பூசாரிகளை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிற்பட்ட சமூகத்திலிருந்து நியமன பட்டியலில் இடம்பெற்றுள்ள 54 பேரில் 31 பேர் நேரடிதகுதி பட்டியலில் உள்ளவர்களாவர். முன்னேறிய சமூகத்திலிருந்து 16 பேர் தகுதி பட்டியலின்படி பூசாரியாக நியமனம் பெற தேர்வாகியுள்ளதாக தேவசம் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் அறிவித்தார்.

ஈழவ சமூகத்திலிருந்து பூசாரி நியமன பட்டியலில் இடம் பெற்ற34 பேரில் 27 பேர் தகுதி அடிப்படையில் நியமனம் பெற உள்ளனர். இதரபிற்பட்டோர் (ஓபிசி) பிரிவிலிருந்து 7 பேரில் இருவரும், தீவர சமூகத்திலிருந்து 4 பேரில் இருவரும் தகுதிஅடிப்படையில் நியமனம் பெற உள்ளனர்.

இந்து நாடார், விஸ்வகர்மா சமுதாயங்களிலிருந்து தலா ஒருவரும், பூசாரியாக நியமனம் பெற தகுதி பெற்றுள்ளனர். இத்தனை எண்ணிக்கையில் பிராமணரல்லாதோர் பூசாரிகளாக நியமிக்கப்பட உள்ளதும், பட்டியலினத்திலிருந்து ஏழுபேர் பூசாரிகளாக நியமிக்கப்படுவதும் கொச்சி தேவசம்போர்டு வரலாற்றில் முதன்முறையாகும்.

தந்திரி மண்டலம், தந்திரி சமாஜம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து பிரபலமான தந்திரிகள் இடம்பெற்றிருந்த குழு இந்த தேர்வை நடத்தியது. ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம் போர்டில் 6 தலித்துகள் உட்பட36 பிராமணர் அல்லாத பூசாரிகள்நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

click me!