திரைமறைவு அரசியல் ஓவர்.! சீனுக்கு வந்த சபரீசன்..! பிறந்த நாள் திருப்பம்..!

By Selva KathirFirst Published Jul 19, 2021, 12:08 PM IST
Highlights

மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மட்டும் அல்லாமல் பத்திரிகையாளர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். 

கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் தான் திமுகவின் பவர் சென்டர் வட்டாரத்தில் முதன் முதலாக சபரீசன் பெயர் அடிபடத் தொடங்கியது.

மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மட்டும் அல்லாமல் பத்திரிகையாளர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். அத்தோடு சபரீசனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த காட்சிகளையும் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் திமுக முன்னணி நிர்வாகிகள் வெளியிட்டிருந்தனர். கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை திரைமறைவு அரசியலில் தான் சபரீசன் தீவிரம் காட்டி வந்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு சபரீசன் மாநிலங்களவை எம்பி ஆவார் என்று கூறினார்கள்.

ஆனால் சபரீசன் பிரசாந்த் கிஷோரை சந்தித்து திமுவிற்காக அவரது அமைப்பை பணியாற்ற அழைத்து வந்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த கையோடு முதல் முறையாக வெளியுலகத்திற்கு தன்னை அறிமுகம் செய்து கொண்டார் சபரீசன். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாளில் சபரீசன் கோட்டையில் இருந்தார். அன்றைய தினம் முதலமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர்ந்திருந்த நிலையில் அவருககு பின்னால் நின்றபடி சபரீசன் கொடுத்த போஸ் சமூக வலைதளங்களில் அப்போதே பேசு பொருள் ஆனது. அன்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள், சந்திப்புகளில் சபரீசன் வெளிப்படையாக கலந்து கொண்டார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் புகைப்படம் எடுக்கும் சமயத்தில் சபரீசன் மிஸ் ஆகி விடுவார். சபரீசன் தொடர்பான புகைப்படங்களை தேடினால் ஒன்று அல்லது இரண்டு தான் கூகுளிலேயே கிடைக்கும். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சபரீசன் தொடர்புடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் குவியத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் இத்தனை நாள் திரைமறைவு அரசியலில் இருந்த சபரீசன் வெளிப்படையான அரசியல் நிகழ்வுகளுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுவும் தனது பிறந்த நாளன்று வழக்கமாக பல்வேறு தரப்பினரை சபரீசன் சந்திப்பது வழக்கம். ஆனால் அப்போது எல்லாம் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை முற்றாக தவிர்த்துவிடுவார் சபரீசன்.

அப்படியே சிலர் வற்புறுத்தி கேட்டாலும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பொது வெளியில் புகைப்படத்தை பகிரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படும். ஆனால் கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய போது புகைப்படங்களுக்கு சபரீசன் உற்சாகமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அத்தோடு இல்லாமல் சபரீசனோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை திமுக நிர்வாகிகள் பலரும் எவ்வித தயக்கமும் இன்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருந்தனர். இதற்கு நிச்சயம் சபரீசன் தரப்பிடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள். திமுகவினர் மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள் என ஒரு பெருங்கூட்டமே சபரீசனை சந்தித்ததாகவும் கூறுகிறார்கள்.

இதுநாள் வரை திரைமறைவில் திமுகவிற்காகவும், மு.க.ஸ்டாலினுக்காகவும் உழைத்து வந்த சபரீசன் இனி வெளிப்படையாக களப்பணியாற்றுவார் என்பதற்கான கட்டியம் கூறும் வகையிலேயே அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் இருந்தது.

click me!