அதிமுக கூட்டணியில் இருந்து அவுட்..! ஜான் பாண்டியன் எடுத்த முடிவு..! பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Jul 19, 2021, 11:51 AM IST
Highlights

கடைசியில் விருதுநகர் மாவட்டம் என்றால் கூட ஓ.கே என்று இறங்கி வந்துள்ளார். ஆனால் அவருடன் கலந்து பேசாமல் அதிமுக தலைமை தன்னிச்சையாக ஜான் பாண்டியனுக்கு எழும்பூர் தொகுதியை அறிவித்ததாக சொல்கிறார்கள். அப்போதே இதனால் ஜான் பாண்டியன் அதிருப்தி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தவர் ஜான் பாண்டியன். அவரது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்காக கடுமையாக வேலை பார்த்தது. எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டாலும் தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டவர் ஜான் பாண்டியன். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் எழும்பூர் தொகுதியில் ஜான் பாண்டியன் தோல்வியை தழுவினார். வாக்கு வித்தியாசமும் மிகவும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார் ஜான் பாண்டியன். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன் கூறியதாவது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்கள். தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன். இதனால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தென் மாவட்டங்களில் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிற தொகுதியில் போட்டியிட அனுமதி அளித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.

எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுகிறது. ஆனாலும் அ.தி.மு.க. வுடனான உறவு நீடிக்கும். இவ்வாறு கூறியிருந்தார். இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முதல் கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. தேர்தல் சமயத்தில் அதிமுகவிற்காக தீவிரமாக களப்பணியாற்றிய நிலையில் அந்த கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகியது உண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாக கூறுகிறார்கள். இது குறித்து விசாரித்த போது, தேர்தல் சமயத்தில் எழும்பூர் தொகுயில் அதிமுக வேட்பாளர்களுக்கு துளியும் குறைவில்லாமல் ஜான் பாண்டியன் தரப்பு செலவு செய்துள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி வார்டு செயலாளர்கள் வரை அனைவரையும் நன்றாக ஜான் பாண்டியன் தரப்பு கவனித்துள்ளது. ஆனாலும் கூட தேர்தல் பணிகளில் அதிமுகவினர் காலை வாரியதாக கூறுகிறார்கள். இது குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்புக்கு அப்போதே பலமுறை ஜான் பாண்டியன் நேரடியாகவே புகார் அளித்தாக கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக எழும்பூர் தொகுதிக்கான அதிமுக பொறுப்பாளர் தேர்தல் பணிகளில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டதாக கூறுகிறார்கள். அத்தோடு கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தான் தொகுதிகளை ஜான் பாண்டியன் கோரியிருக்கிறார்.

கடைசியில் விருதுநகர் மாவட்டம் என்றால் கூட ஓ.கே என்று இறங்கி வந்துள்ளார். ஆனால் அவருடன் கலந்து பேசாமல் அதிமுக தலைமை தன்னிச்சையாக ஜான் பாண்டியனுக்கு எழும்பூர் தொகுதியை அறிவித்ததாக சொல்கிறார்கள். அப்போதே இதனால் ஜான் பாண்டியன் அதிருப்தி அடைந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் கூட்டணி தர்மத்திற்காக தேர்தல் பணியாற்றியுள்ளார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தரப்பில் இருந்து மரியாதை நிமித்தமாக கூட ஜான் பாண்டியன் தரப்பிடம் எதுவும் பேசவில்லை என்கிறார்கள். மேலும் அதிமுக கூட்டணிக்கு வர ஜான் பாண்டியன் சம்மதிக்கவே பாஜக தான் காரணம் என்கிறார்கள். பாஜக மேலிடத்துடனான நெருக்கம் மற்றும் அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே கூட்டணியில் ஜான் பாண்டியன் இணைந்ததாகவும் சொல்கிறார்கள்.எனவே தான் அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார் என்கிறார்கள்.

click me!