வெற்றியை அறுவடை செய்ய விழிப்பாக இருங்கள்... வெற்றி நமதே... தொண்டர்களுக்கு ராமதாஸின் எச்சரிக்கையும் வாழ்த்தும்!

By Asianet TamilFirst Published Apr 5, 2021, 8:58 PM IST
Highlights

தேர்தல் களத்தில் நாம் தீவிரமாக பணியாற்றிய விதைத்த வெற்றியை அறுவடை செய்யும் நேரம் வாகுப்பதிவு நேரம்தான் என்பதால் மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
 

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (06.04.2021) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 7.00 மணி வரை நடைபெறுகிறது. பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் முகவர்களாக (பூத் ஏஜெண்டுகள் ) பணியாற்றவிருக்கும் பாமக, அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அதே போல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களாக பணியாற்றும் பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் எனது வாழ்த்துகள்.
வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் நாளை காலை 5.00 மணி முதல் 5.30 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு (பூத்) சென்று விட வேண்டும். காலை 6.00 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அதில் நமது முகவர்கள் பங்கேற்று வாக்குகள் சரியான சின்னத்தில், சரியான எண்ணிக்கையில் பதிவாகின்றனவா? என்பதைச் சரி பார்க்க வேண்டும். காலை 7.00 மணிக்கு தொடங்கி இரவு வாக்குப்பதிவு நிறைவடையும் வரை அனைத்து முகவர்களும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்படும் வரை வாக்குச்சாவடிகளை விட்டு வெளியேறக் கூடாது.
தேர்தல் களத்தில் நாம் தீவிரமாக பணியாற்றிய விதைத்த வெற்றியை அறுவடை செய்யும் நேரம் வாகுப்பதிவு நேரம்தான் என்பதால் மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களின் விழிப்பான பணிதான் நமது அணியின் வெற்றியை உறுதி செய்யும் என்பதால் அதிக கவனம் தேவை. தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நமது முகவர்கள் மே 2-ஆம் தேதி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். வெற்றி நமதே!” என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

click me!