வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா... அதிமுக பிரமுகர் வீட்டில் கட்டு கட்டாய் பணம் பறிமுதல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 5, 2021, 7:32 PM IST
Highlights

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடைசி ஒருமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான 10,813 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 537 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலான நாளில் இருந்தே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதை தவிர்க்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பணப்பட்டுவாடா குறித்து கிடைத்த புகார்களின் அடிப்படையில் கட்சி பேதமின்றி தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இன்று ஊத்தங்கரை தனி தொகுதிக்குட்பட்ட சென்னப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நேற்று பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் ராமுவின் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்ட 2 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய், வாக்காளர் அடையாள அட்டைகள், பூத் ஸ்லிப் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இன்று அதிகாலை மீண்டும் நடைபெற்ற சோதனையில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 53 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

tags
click me!