மாவட்ட கவுன்சிலர் பதவியும் போச்சு... மருகும் முருகேசன்..!

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2021, 8:03 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எத்தனையோ கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக -திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எத்தனையோ கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக -திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

அப்படி அதிமுக -திமுக நேரடியாக மோதிக்கொள்ளும் தொகுதிகளில் ஒன்று பரமக்குடி (தனி) தொகுதி. கடந்த ஒரு மாதமாக இரு கட்சி வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் முனைப்புடன் ஈடுபட்டனர். பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசன் செங்கல்சூளை, பெட்ரோல் பங்குகள் என ஏராளமான சொத்துக்கள் உடன்குடி அருகே உள்ள ஊரில் வசித்து வருகிறார். முருகேசனின் மனைவி கடந்த 10 ஆண்டுகளாக பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தவர். முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்த போதிலிருந்தே சர்ச்சைகள் சுழன்று கொண்டிருக்கின்றன.

திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் முருகேசனின் கல்வித்தகுதி பி.ஏ., என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முருகேசன் தனது வேட்புமனுவில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே தான் படித்து இருந்ததாக தெரிவித்திருந்தார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. அடுத்துதான் வகித்த மாவட்ட கவுன்சிலர் பதவியை இராஜினாமா செய்யாமலேயே வேட்பு மனு தாக்கல் செய்தார் முருகேசன். இதனால் வேட்பு மனு நிராகரிக்கப்பட, தொடர்ந்து அவசரம் அவசரமாக தனது மாவட்ட கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இறுதி நாளில் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடைமுறை இருக்கும் காலத்தில் தேர்தல் விதிமுறைகள் பற்றி இவர் தெரியாமல் செய்த காரியங்கள் கட்சி தலைமைக்கு மிகுந்த சங்கடங்களை ஏற்படுத்தியது. இப்படி சிக்கலில் தொடங்கிய திமுக வேட்பாளர் முருகேசனின் மிகப்பெரிய சவால் பரமக்குடி தொகுதியின் வாக்காளர்களே. அதிமுகவின் கோட்டை என அழைக்கப்படும் பரமக்குடி தொகுதி முக்குலத்தோர், யாதவர், சௌராஷ்டிரா, தேவேந்திர வேளாளர் எனப் பல பிரிவுகளைக் கொண்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த முறை பரமக்குடி தொகுதி மக்களின் இயல்பான அதிமுக மீதான நம்பிக்கையை இழக்க வேண்டிய சிக்கலில் உள்ளார் முருகேசன். 

எனவே அதிகம் வசிக்கும் யாதவர் மற்றும் சௌராஷ்டிரா இன மக்களை குறிவைத்து வாக்குகளை சேகரித்து வந்தார். இது மற்ற சமூகத்தினரை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. பரமக்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளராக கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சதன் பிரபாகரன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது டீ போடுவது, கொத்து பரோட்டா போடுவது, பறை இசை, நடனம் என களத்தில் கலக்கிய சதன் பிரபாகர் நெசவு செய்யும் மக்களின் தேவைகளையும் மிளகாய் பருத்தி விவசாயிகளின் தேவைகளையும் நன்கு உணர்ந்து அவர்களுக்கு சில வாக்குறுதிகளை கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ’’2019 20 ஆண்டில் 43 கிராமங்களுக்கு குடிநீர் வசதி, பள்ளி கட்டிடம் சீரமைத்தல் என பல பணிகளை செய்து முடித்துள்ளேன். 2020 21 ஆம் ஆண்டிற்கு 33 கிராமங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கண்டறிந்து நிறைவேற்றியுள்ளேன். காலத்தில் சாதி, மத, கட்சி பேதமின்றி ஒரு லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி மக்கள் பணியாற்றிய மக்கள் என் பணியை நினைவு கூர்ந்து மீண்டும் வாக்களிப்பார்கள்’’ எனக் கூறுகிறார். தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா சிகிச்சைக்காக ரத்த பிளாஸ்மா தானம் செய்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. மிகுந்த செயல்பாடுகளுடன் களப் பணியாற்றி வருவதால் சதன் பிரபாகர் இந்த முறை பரமக்குடியில் மீண்டும் வெல்வார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

click me!