
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் வலுத்துவருகிறது. இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள போதிலும் சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான இவ்வளவு சர்ச்சைகளுக்கும் சசிகலா, தினகரன் ஆகியோரின் மௌனம்தான் காரணம் என நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மருது அழகுராஜ் இந்த குற்றச்சாட்டை வைத்தார்.
எப்பொழுதும் ஜெயலலிதாவுடன் கூடவே இருந்த சசிகலா, அவரை நன்றாக பார்த்துக் கொண்டிருப்பார் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைபற்றி வெளிவந்துள்ள தகவல் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் ஜெயலலிதா வீட்டில் இல்லை என்ற தகவல் ஆகியவற்றை வைத்து பார்க்கையில், ஜெயலலிதாவை சசிகலா சரியாக பார்த்துக்கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதாவின் உடல் ஆரோக்கியத்தை அவரும் சரியாக பார்த்துக்கொள்ளவில்லை, அவருடன் இருந்தவர்களும் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கவில்லை.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ பதிவுகள் தினகரனிடம் உள்ளதாகவும் அவற்றை நேரம் வரும்போது வெளியிடலாம் எனவும் தினகரன் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் பூதாகரமானதற்கு சசிகலாவும் தினகரனும்தான் காரணம்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்கள் எழுந்தபோதே வீடியோ பதிவுகளையோ தெளிவான விளக்கங்களையோ வெளியிட்டிருந்தால் இவ்வளவு பெரிய சர்ச்சையாக வெடித்திருக்காது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான அவர்களின் மௌனமே இவ்வளவு பெரிய சர்ச்சைக்குக் காரணம் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
மௌனத்தை கலைத்திருந்தால் சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.