
அல்லிநகரம் நகராட்சி தலைவியின் ஆடியோ பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆடியோவில் சர்ச்சை பேச்சு
தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் நகராட்சி தலைவியான ரேணுப் பிரியாவும் திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரியும் பேசிய ஆடியோ தேனி மாவட்டத்திலும் திமுக வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அந்த ஆடியோவில் நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியாவும் கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரியும் பேசிக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் தான் பணம் செலவு செய்ததாகவும் கவுன்சிலர்களுக்கு தர வேண்டிய பணம் அனைத்தும் மாவட்ட செயலாளரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். மேலும் பணத்தை செலவு செய்த பிறகு தன்னுடைய கணவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். என்னுடைய நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை என ரேணுப்பிரியாவும் சந்திரகலா ஈஸ்வரியும் புலம்புகிறார்கள்.
தங்கத் தமிழ்ச்செல்வன் விளக்கம்
இந்த ஆடியோ வெளியான பிறகு தேனி மாவட்ட திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்ட செயலாளரிடம் பணம் கொடுத்து வைத்திருப்பதாக ஆடியோவில் தகவல் இடம் பெற்றிருப்பதால் தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பெயரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். “ஆடியோவில் பேசியது போல் எந்தப் பணமும் மாவட்ட செயலாளரான என்னிடம் கொடுக்கப்படவில்லை. ஆடியோ விவகாரத்தில் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீடிக்கும் பேச்சுவார்த்தை
திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு அல்லி நகரம் நகராட்சித் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தலைவர் பதவி தொடர்பாக தலைமை கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை முடியும் வரை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ரேணுபிரியாவே நகராட்சித் தலைவராக இருப்பார்” என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதை படிங்க: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது எப்போது.? ஸ்டாலின் நடவடிக்கைக்காக ஆவலுடன் காத்திருக்கும் அமைச்சர்.!