
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் பதவியில் உரிமை உள்ளது என்றும், அவர்களது கணவன்களுக்கு உரிமை இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கவுன்சிலர் பதவியை பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 12 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை மாநகராட்சி மேயராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த பட்டதாரி பெண் பிரியா ராஜனுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற திமுக தலைவர் கருணாநிதியின் இட ஒதுக்கீடு கொள்கையை ஸ்டாலின் முழுமையாக நடைமுறைப் படுத்தியுள்ளார். அதே நேரத்தில் ஒரு சில பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் தங்களது மனைவியின் கவுன்சிலர் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி கட்ட பஞ்சாயத்து செய்வது, பணம் வசூல் செய்வது, காவல்துறையிடம் அராஜகமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது திமுக கவுன்சிலர்கள் மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பலரும் விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர். அந்தவகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமே பதவியில் உரிமை உள்ளது என்பதையும், அவர்களது கணவன்களுக்கு உரிமை இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் சொத்து வரி உயர்வு மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- ஏற்கனவே மக்கள் பிரச்சனையில் உள்ள போதே சொத்து வரி உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் இப்போதுதான் மீண்டு வந்துள்ளனர். எனவே எந்த வரி உயர்வாக இருந்தாலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர், அவரிடம் சிக்கும் படங்கள் ஏலம் விடப்படுகிறது. தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தருணத்தில், இதைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும் என அவர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். இப்படி செய்தால் தான் மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற அவர், தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி திமுக அதை நிறைவேற்றாமல் வரியை மட்டும் உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.