18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க எதிர்ப்பு உள்ளிட்ட 5 வழக்குகள்..! நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை..!

First Published Nov 2, 2017, 12:13 PM IST
Highlights
assembly related 5 cases recommended to CJI of chennai high court


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான 5 வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு பரிந்துரைத்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு விசாரித்து வந்தார். இந்த 5 வழக்குகளின் மீதான விசாரணை இன்று நடந்தது. 

அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் வகையிலான வழக்குகளாக இருப்பதால் சட்டப்பேரவை தொடர்பான 5 வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிப்பதை விட கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும். எனவே கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு தெரிவித்தார்.

இதையடுத்து சட்டப்பேரவை தொடர்பான 5 வழக்குகளையும் நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமா என்பது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முடிவெடுப்பார்.

click me!