விடாதீங்க.. அண்ணாமலையை புடிச்சு உள்ள போடுங்க... டுவிட்டரில் டிரெண்டிங்கான #ArrestAnnamalai

By manimegalai aFirst Published Jan 27, 2022, 8:34 PM IST
Highlights

பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி #ArrestAnnamalai ஹேஷ்டேக் இணையத்தில் படு டிரெண்டிங் ஆகி வருகிறது.

சென்னை: பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி #ArrestAnnamalai ஹேஷ்டேக் இணையத்தில் படு டிரெண்டிங் ஆகி வருகிறது.

ஒரு பள்ளி மாணவியின் மரணம் இவ்வளவு தூரம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் படித்து வந்தார்.

பள்ளி விடுதியில் தங்கி படித்த அவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் பள்ளி நிர்வாகம் மதம் மாற சொல்லி அழுத்தம் கொடுத்ததாக மாணவி கூறியிருந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் இந்த வீடியோ சகட்டுமேனிக்கு இணையத்தில் வைரலானது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 20ம் தேதி  தமது டுவிட்டர் பக்கத்தில் மாணவி பேசும் வீடியோவை பதிவிட்டார். அந்த டுவிட்டர் பக்கத்தில் மாணவியின் பெயரும் இடம்பெற்று இருந்தது.

விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்க, மதமாற்றம் இல்லை என்று தஞ்சை எஸ்பி தரப்பு விளக்கம் அளித்தது. அப்போதும் விடாத பாஜக, கடந்த 25ம் தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாணவிக்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தது. இந்த சூழலில் மாணவி விவகாரத்தில் அவர் பேசியதாக புதிய வீடியோ வெளியாக விவகாரம் வேறு பக்கம் திரும்பியது.

அந்த வீடியோவில் மதமாற்றம் செய்ய சொன்னதாக கூறப்பட்ட வீடியோவுக்கு முற்றிலும் மாறாக இருந்தது. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் பிரச்னையையும், மாணவியின் மரணத்தையும் அண்ணாமலை தவறாக சித்திரிக்கிறார், மாணவியின் போட்டோ, வீடியோ, பெயர் என எல்லாவற்றையும் வெளியிட்டுள்ளார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று குரல்கள் வலுத்தன.

அதற்கு ஏற்றாற்போல் #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக் தற்போது படு டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பலரும் டிரெண்டிங் ஆக்கி வருவதோடு, பாஜகவையும், அதன் தமிழக தலைவர் அண்ணாமலையையும் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். பிரச்னையை திசை திருப்பிய அண்ணாமலை மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தின் அமைதியை கெடுத்து, மத பிரச்னையை ஏற்படுத்த நினைக்கிறார் அண்ணாமலை என்று ஆளாளுக்கு டுவிட்டரில் போட்டு தாக்கி வருகின்றனர்.

மதமாற்றம் காரணம் இல்லை என்று அந்த மாணவி தெளிவாக வீடியோவில் கூறியும் வேண்டும் என்றே பிரச்னை செய்துள்ளது பாஜக என்று பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். புதிய வீடியோ உண்மை என்ன என்பதை அனைவருக்கும் சொல்லிவிட்டது, இனி மத அரசியலை பாஜக பேச வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

click me!