அதாவது "வரி கட்டிட்டா பிளாக் மணி ஒயிட்டாயிடும் ...அப்படிதானே..!? சரி அப்படியே செஞ்சுடுறேன்...விவேக் புது விளக்கம்..!

First Published Nov 14, 2017, 1:56 PM IST
Highlights
anybody who earns money whether legal or illegal should pay income tax says vivek jayaraman is it


யாரு தப்பா காசு சம்பாதிச்சிருந்தாலும் ஐ.டி. கட்டியாகணும்... என்றார் விவேக் ஜெயராமன்.  அவரது கருத்து எப்படிப்பட்டது?  அப்படி என்றால்...

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. 

கடந்த 5 நாட்களாக, ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் சிஇஓ  விவேக் ஜெயராமன் வீட்டில் நடந்த சோதனை நேற்று மாலை முடிவடைந்தது. பின்னர் விவேக்கை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் இன்று விவேக் பேசுவார் என்று பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதன்படி, இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவேக், ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை கடந்த 2 ஆண்டுகளாக நிர்வகிக்கும் தன்னிடம் அங்கே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அதற்கான தெளிவான விளக்கத்தை, தான் அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், திருமணத்தின் போது தனது மனைவிக்கு போட்ட நகை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தான் பதிலளித்ததாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர் கூறியதுதான் ஹைலைட். 

சாமானியர் முதல் அமைச்சர் வரை யாராக இருந்தாலும் தவறாக சம்பாதித்தால் வரி கட்டியே தீர வேண்டும் என்று ஒரு போடு போட்டார். 

வருமான வரித் துறையைப் பொறுத்த வரை, அதற்கு முறையான அல்லது முறைகேடான வழிகளில் பணம் சம்பாதித்தல் என்ற வரைமுறை கிடையாது. வருமான வரித்துறைக்கு, எந்த வருமானமும் சரி, அது வரிகளுக்கு உட்பட்டது என்பதுதான் கொள்கை. அதன்படி அவர்கள் சோதனை மேற்கொண்டு, கிடைத்ததை வைத்து கேள்விகள் எழுப்பி, அதற்கு வரி கட்டப்பட்டிருந்தால், அதனை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். 

அவ்வகையில், வருமான வரித்துறை விவகாரத்தில் எழுப்பப் படும் சந்தேக வருமானத்துக்கு வரி கட்டியிருந்தால், நான் இதற்கு வரிகட்டியிருக்கிறேன், எனவே இதில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று நீதிமன்றத்திலும் அணுகலாம். ஆனால், முன்னர் ஜெயலலிதா விவகாரத்தில் இதே போல், நான் வருமான வரி கட்டியிருக்கிறேன் என்று அதில் இருந்து வெளியே வர முயன்றார். இருப்பினும், அவர் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு, அதற்கு அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் வரி செலுத்தி, அதன் பின்னர் தான் வரி கட்டிவிட்டதாகக் கூறி, நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். அதுவும் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் சொன்னதன் பேரில்! 

இருப்பினும், வருமான வரித் துறை கணக்கிட்டு, வரி கட்டியிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துவிட்டதானாலேயே கருப்புப் பணம் வெள்ளை ஆகிவிடாது. எனவே, அது கறுப்பா வெள்ளையா என்பதெல்லாம் வருமான வரித் துறையைப் பொறுத்தவரை கேள்வியில்லை. வரி கட்டப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. 

இந்த ஒரு காரணத்தை மனத்தில் கொண்டுதான், விவேக்,  யாரு தப்பா காசு சம்பாதிச்சிருந்தாலும் ஐ.டி. கட்டியாகணும்... என்றார். முறையாக சம்பாதிப்பவர்கள், அல்லது சம்பளதாரர்கள், வரி விலக்கு கோரி தாக்கல் செய்யும் படிவங்கள் மூலம் அவரவர் கணக்கை வருமான வரித் துறையிடம் கொடுத்து விடுவார்கள். ஆனால், இது போன்ற முறைகேடான விவகாரங்களில் வருமானம் ஈட்டுபவர்கள், வரி கட்டி விட்டுத் தப்பி விடலாமே என்றுதானே நமக்குத் தோன்றும். 

ஆனால், வருமான வரித்துறை, தன் வேலையோடு நின்றுவிடாது. தங்கள் துறையின் சட்ட திட்டப் படி, வரி கட்டப்பட்டிருக்கிறதா என்று கணக்கிட்டுவிட்டு, அதன் பின்னர், வருமானத்துக்கான மூல வழிகள் (சோர்ஸ்) குறித்து ஆராயும். அதில் தங்களுக்கு திருப்திகரமான பதில்கள் பெறப்பட்டால் விட்டு விடும். ஆனால், முறைகேடான வழிகளில் பெறப்பட்ட வருமானத்துக்கு சரியான சோர்ஸ் காட்டப்படாத பட்சத்தில் அதனை அமலாக்கத்துறை  வசம் தள்ளிவிடும். அமலாக்கத்துறை, அதைத் தொடர்ந்து, ஊழல் கண்காணிப்புத் துறை,  அன்னியச் செலாவணி பரிவர்த்தனை என பல துறைகளில் கேள்விக்கணைகள் துளைத்தெடுக்கப்படும். 

எனவே வருமான வரித்துறையைப் பொறுத்த வரையில் விவேக், இந்தக் கணக்குகளுக்கு முறையாக வரி கட்டியிருந்தால், அதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், மற்ற துறைகளின் கிடுக்கிப் பிடி இறுகும் போது, பிரச்னையை அவர் எதிர்கொண்டாக வேண்டும். 

வருமான வரித்துறையின் பிரிவு 64ல் கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்து கூறப்பட்டிருக்கும். கணக்கில் காட்டப்படாத பணம் என்பது குறித்து வரும்போது, பினாமி சொத்துக்கள் குறித்த சட்டப் பிரிவுகள் அதில் பாயும். அதன்படி, பணம் யாருடையது, எப்படி வந்தது, யாருக்குச் சேர வேண்டியது அதன் தன்மை என்ன என்றெல்லாம் கேள்விக் கணைகள் பாயும்.

உதாரணத்துக்கு இப்போது தினகரன், சசிகலா ஆகியோரின் சொத்துகள் விவேக் தரப்பில் பினாமியாக வைக்கப் பட்டிருக்கிறது என்று கூறப்படுவதாக வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே முந்தைய, ‘வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துகள் சேர்த்த’ விவகாரத்தில் சிறையில் உள்ள சசிகலாவின் மீதே மீண்டும் மீண்டும் அழுத்தம் பாயும். சசிகலாவின் ஏற்கெனவே உள்ள இதே வழக்குகள் மீது, இந்த சோதனையில் கண்டறிந்த வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துகளும் சேர்க்கப்படக் கூடும். அப்படி என்றாலும், பினாமி சட்டப் பிரிவில் இவர்கள் மாட்டிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, பண முறைகேடு, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் இவர்கள் மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். 

click me!