
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா குடும்பத்தினரின் அரசியல் ஆசைக்கு ஆணி அடிக்கவே ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளாக நிழலாக இருந்து தன்னையும், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் வளர்த்துக் கொண்டவர் சசிகலா. ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அத்துடன் இருந்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.
கட்சிப் பதவியைப் பிடித்த கையோடு ஆட்சிக்கும் வரத்துடித்தால்தான் தான் இத்தனை வினை. சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றது என அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடித்துவிட்டன. சரி சிறைக்குள் இருந்து கொண்டு ஆட்சி செய்யலாம் என நினைத்திருந்த நிலையில் அதற்கும் ஆப்பு வைத்தனர் எடப்பாடி பழனிசாமியும்,. டி.,டி.வி.தினகரனும்.
டி.டி.வி.தினகரன் பேராசையால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நிற்கப்போக அது விபரீதமாய் முடிந்தது. இரட்டை இலை சின்னத்தை பெறதேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸ் பிடித்து சிறைக்குள் தள்ளியது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில்… துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் டெல்லி திஹார் சிறையில் …இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் டெல்லி மேலிடத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர்.
முதலில் ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்த தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் அரசியல் களம் இறங்கினார். தொடர்ந்து சசிகலா தனது கணவரைக் காண வேண்டும் என பெயிலில் வந்தவர் சென்னையில் அரசியல் வேலையைத் தான் பார்த்தார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதே நேரத்தில் தேர்தல் ஆணையம், பொதுக் கூட்டம், எம்எல்ஏக்களை கடத்திச் சென்றது என தொடர்ந்து சசிகலா குடும்பம் ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவே டெல்லியிலும், சென்னையிலும் பார்க்கப்பட்டது.
இப்ப .. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கனும்..என்ன செய்வது என்று யோசித்த மேலிடம் உடனடியாக அரசு இயந்திரங்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் அரசியல் ஆசையை முற்றிலும் ஒழித்துவிடலாம் என கணக்குப்போட்டு இந்த ரெய்டு விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி அடுத்தடுத்த ஆப்ரேஷன்களை அமலாக்கத்துறை முறை மூலம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நம்ம பண்ணிய அலப்பறைக்கு அந்த கடக்காரன் கடைய மூடிட்டு ஓடிட்டா அவன் நம்க்கு அடிமை என்ற வடிவேலுவின் காமெடி காட்சி தமிழகத்தில் நிறைவேறுமா ? பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.