அம்மா வழியில் நடக்கும் அமைச்சர் மணியன், தினகரன் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்க வேண்டுமே..?

First Published Dec 28, 2017, 4:18 PM IST
Highlights
anybody registered a case against dinakaran who supposed to defame cm and minister jayakumar


எடுபிடி பழனிசாமி - இப்படி ஒரு மாநில முதல்வரை மட்டப் படுத்தி அல்லது கேவலமாகப் பேசியிருப்பவர் யார்..? அப்படிப் பேசியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? 

அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத்தலையன் என்று, உடல் ரீதியாக கேவலப்படுத்திக் கூறினார் ஒருவர். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது. அல்லது மான நஷ்ட வழக்கு போடப்பட்டதா?

இன்று அதே ஜெயக்குமாரை ஒருவர் டெங்கு கொசு என்று கூறுகிறார். டெங்கு கொசுவை ஒழிப்பது போல் ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஜெயக்குமார் அல்லது அவருக்கு வக்காலத்து வாங்கும் அமைச்சர்கள் யாரேனும் மான நஷ்ட வழக்கு தொடுத்துவிட்டார்களா என்ன?

இவை எல்லாம் மக்கள் கேட்கும் கேள்விகள். காரணம் இன்று அமைச்சர் ஓ.எஸ். மணியன், ஆடிட்டர் குருமூர்த்தி விவகாரத்தில், ஜெயலலிதா ஆட்சியில் இது போல் நடந்திருந்தால்  மான நஷ்ட வழக்கு போடப் பட்டிருக்கும் என்று கூறியிருப்பதுதான்! 

இத்தனை கேலி கிண்டலையும் விட்டுவிட்டு, எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்ட அந்த ஓர் ஆங்கில வார்த்தைக்காகப் பொங்கியிருக்கிறார் ஓ.எஸ். மணியன். அவரது கருத்தினைக் குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் சில கேள்விகளை எழுப்புகிறார்கள். 

ஆர்.கே.நகர் தேர்தலில் வென்ற பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, எடுபிடி பழனிச்சாமி என்றும் அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத்தலையன் என்றும் கூறினார். ஆனால், அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பாத அவர்கள், இப்போது குருமூர்த்தியிடம் பொங்கியிருக்கிறார்கள்!  

எஸ்.குருமூர்த்தியோ, தான் குறிப்பிட்ட அந்த ஒரு வார்த்தைக்கு வேறு பல அர்த்தங்கள் உண்டு. நான் அதை தனிச் சொல்லாக அல்லாமல், சொற்றொடராகப் பயன்படுத்தியதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார் குருமூர்த்தி. ஆனால், நமக்கென்னவோ அவர்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. காரணம் அவர்கள் இப்படிப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என்பதை தினகரன் சரியாகப் புரிந்து கொண்டு அந்த வார்த்தைகளைக் கூறியிருக்கிறாரே! - இதுதான் சமூக வலைத்தள வாசிகளின் கிண்டல். 

காரணம், ஜெயலலிதா இருந்த போது, தன்னை எதிர்த்து அல்லது எதிர்ப்பு அரசியலில் கருத்துகளைக் குறிப்பிட்டால், அவர்கள் மீது வழக்கு போட்டே அச்சத்தில் வைத்திருந்தார். ஆனால், இப்போது ஆட்சியில் இருப்பவர்களை அவர்கள் கட்சிக்காரர்கள் அல்லது அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களே படு கேவலமாக விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்கவோ, மான நஷ்ட வழக்கு போடவோ, ஆட்சியாளர்களுக்கு ஏன் துணிவு வருவதில்லை? என்று கேள்வி எழுப்பும் பலர், உண்மையில் குருமூர்த்தி கூறிய வார்த்தையை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள். 

click me!