
அப்போலோ மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோவை, ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால்தான், சசிகலா வீடியோ எடுத்தார் என்றும் அது ஆதாரத்துக்காக எடுக்கப்படவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். நாளை, அவர் பதவி ஏற்க உள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, எடுக்கப்பட்ட வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், ஜெயலலிதா கேட்டதால்தான், சசிகலா வீடியோ எடுத்ததாக கூறினார். இந்த வீடியோ எடுத்தது ஆதாரத்துக்காக அல்ல என்றும் கூறினார்.
பாஜகவுக்கு பயந்துதான் எடப்பாடி தரப்பு இருப்பதாகவும், அதனால்தான் அவர்கள் மீது மக்களுக்கு கோபம் உள்ளதாகவும் கூறினார். ஆட்சி மாற்றத்துக்காக வாக்கு கேட்டேன். அதனால் மக்கள் வாக்களித்துள்ளார்கள். மூட்டைப்பூச்சியைவிட ஆபத்தானது டெங்கு கொசு; டெங்கு கொசுக்கள்தான் தற்போது அமைச்சரவையில் உள்ளனர் என்றார். அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதை ஒரு பொருட்டாகவே தாம் நினைக்கவில்லை என்றும் அரசியலில் தமக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றும் கூறினார்.
தமிழக வரலாற்றிலேயே ஓட்டு எந்திரம் உடைக்கப்பட்டது இப்போதுதான் என்றும், இதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் காரணம் என்று கூறுவதாக அவர் கூறினார். ஆர்.கே.நகரில் தன்னை மக்கள் தேர்ந்தெடுத்ததன் மூலம் உண்மையான அதிமுக எது என்பதை மக்கள் உணர்த்தி விட்டதாகவும் கூறினார். கட்சியின் பெயர், சின்னம் மட்டுமே வெற்றியைத் தேடித்தராது என்றும் தினகரன் கூறினார்.