
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு டெங்கு கொசு எனவும் காமெடியன் ஜெயக்குமார் கருத்து தொடர்பாக கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார் தினகரன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதாவின் நினைவுதினத்தை ஒட்டி சசிகலா மௌன விரதம் இருந்துவருகிறார். அதனால் என்னுடன் எதுவும் பேசவில்லை. நான் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் தலையாட்டினார்.
அமைச்சர் ஜெயக்குமார் என்னை மூட்டைப்பூச்சி என்று விமர்சனம் செய்துள்ளார். மூட்டை பூச்சியாவது பரவாயில்லை. ஆனால் ஜெயக்குமார் ஒரு டெங்கு கொசு. மிகவும் பேராபத்து வாய்ந்தது. காமெடியன் ஜெயக்குமாரின் கருத்தை பற்றி என்னிடம் கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
பழனிசாமி, பன்னீர்செல்வம் உட்பட ஆட்சியாளர்கள், பாஜகவைக் கண்டு பயப்படுகிறார்கள். அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து தொண்டர்களும் பொதுச்செயலாளர் சசிகலாவும்தான் தீர்மானிக்க வேண்டும். இதுதொடர்பாக தொண்டர்கள் கருத்து தெரிவித்தால், அதை சசிகலாவிடம் தெரிவிப்பேன் என தினகரன் தெரிவித்தார்.