தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட அதிக இடங்களில் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை போட்டியிடும் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக சோதனையா.?
சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை பார்க்க வந்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்ற கேள்விக்கு , வழக்குகள் இருக்கலாம், யாரும் குற்றவாளி என தண்டிக்கப்படவில்லை என்ற அவர், தமிழகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படவில்லை என்றும் , தவறு செய்தவர்கள் மீது உரிய ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது என்றும் , தவறு செய்யாதவர்கள் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
மணிப்பூர் - மத்திய அரசு கடும் நடவடிக்கை
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் நான்கு முறை அங்கே பயணம் செய்து, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார் . இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் விவகாரத்தைப் பற்றி மட்டுமே பேசுபவர்கள், ராஜஸ்தான் , மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை பேசுவதில்லை. பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி உரிய விளக்கம் அளித்திருக்கிறார்.
அதிக தொகுதிகளில் பாஜக போட்டி
தமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், வரும் பாராளுமன்ற தேர்தலில் முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட அதிக இடங்களில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என்றார். கட்சத்தீவு குறித்து தற்போது தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் தமிழக முதலமைச்சர், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று அனுராக் சிங் தாகூர் கேள்வி எழுப்பினார்.