பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டதாக பொய் செய்தி பரப்பிய உத்தரபிரதேச பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ்வுக்கு தற்காலிக முன்ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.?
தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து போலி வீடியோக்கள் உள்ளிட்டவைக்கு எதிராக தமிழ்நாடு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநில பாஜக செய்தித்தொடர்பாளரான பிரஷாந்த் உம்ராவ், தனது டிவிட்டர் பக்கத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து "தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 பீகார் தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி
மேலும் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதும், தேஜஸ்வி யாதவ் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் எனவும் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், மொழி, வசிக்குமிடம், இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல் , வேண்டுமென்றே அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தூண்டிவிடுதல் மற்றும் ஆகியவற்றின் கீழ் உத்திரபிரதேச மாநில பாஜக செய்தித்தொடர்பாளரான பிரஷாந்த் உம்ராவ் மீது காவல்துறை வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் அவரைக் கைது செய்ய, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புக் குழு உத்திரபிரதேச மாநிலம் விரைந்தது.
முன் ஜாமின் கேட்ட பாஜக நிர்வாகி
இந்நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் தனக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் தன்னைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், இடைக்கால முன் ஜாமீன்வழங்ககோரியும் பிரஷாந்த் உம்ராவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் சில முன்னணி பத்திரிகையாளர்களின் கட்டுரைகளையே பகிர்ந்தேன் எனவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன்மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார், எனவே தான் உரிய நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் கோருவதற்கு ஏதுவாக தன்னை கைது செய்யாமலிருக்க தற்காலிக முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
4 வார கால அவகாசம் தேவை
அப்போது நீதிபதி, இந்த வழக்கில் 12 வாரம் இடைக்கால முன்ஜாமின் எப்படி கொடுக்க முடியும், தூத்துக்குடி அல்லது மதுரை சென்று உரிய நீதிமன்றத்தை அணுக வேண்டியது தானே, எனவே உரிய நீதிமன்றத்தை அணுகும் வகையில் உரிய உத்தரவை பிறப்பிக்கபோவதாக கூறியதோடு 1 வாரம் மட்டுமே தற்காலிக ஜாமின் வழங்க முடியும், ஏனெனில் தமிழ்நாட்டின் நீதிமன்றத்தை அணுகுவதை சிரமம் கிடையாது என கூறினார். அப்போது மனுதாரர் தரப்பில், தன் மீதான வழக்கு தூத்துக்குடி மற்றும் திருப்பூரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசு வேண்டுமென்றே இவ்வாறு செய்துள்ளது எனவும், மேலும் 1 வார கால அவகாசம் போதாது எனவும் எனவே குறைந்தபட்சம் 4 வார காலம் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.
பதிவை டெலிட் செய்த பாஜக நிர்வாகி
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, இந்த வழக்கில் மனுதாரரின் பேச்சுரிமை என்பதற்காக விஷம கருத்துகளை பதிவிடக்கூடாது, இந்த நபர் தன் கட்டுரையில் கூறிய கருத்துக்காக வருத்தமோ, மன்னிப்போ கூட தெரிவிக்கவில்லை, ஒரு விஷம கருத்தால் எந்த அளவு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். எனவே பிரசாந்த் உம்ராவுக்கு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் மனுதாரர் மன்னிப்பு கோரியிரிக்கலாமே ? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உம்ராவ் தரப்பு, அது அவரின் சொந்த கருத்து கிடையாது ஒருபத்திரிகையின் செய்தியை பகிர்ந்ததாகவும், அதனை பின்னர் சுட்டுரை பக்கத்தில் இருந்து அழித்து விட்டார் என கூறினர்.
20 ஆம் தேதி வரை முன் ஜாமின்
மேலும் 10 நாட்கள் அவகாசம் போதாது எனவும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என உம்ராவ் தரப்பில் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதி, பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவுக்கு வரும் 20ம் தேதி வரை தற்காலிக முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.இதனால் பிரசாந்த் உம்ராவ்-வை தமிழக காவல்துறையினர் வரும் 20ம் தேதி வரை கைது செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
நாட்டிலேயே மத பிரச்சினை இல்லாத மாநிலங்களாக தமிழகம், கேரளா உள்ளன - பினராயி பெருமிதம்