9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து வேலூர் பொதுக்கூட்டத்தில் நான் பேசும் போது பதில் தெரிவிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமித்ஷா வருகையின் போது மின்சார துண்டிக்கப்பட்டதில் தான் அரசியல் செய்ய விரும்பவில்லையெனவும் கூறினார்.
சென்னையில் அமித்ஷா
வேலூர் பொதுக்கூட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரசியல் சாராத கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் துறை சார்ந்த 25 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, அபிராமி ராமநாதன், நடிகர் ஜிவி பிரகாஷ், முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், அனிதா பால்துரை, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அப்போலோ மருத்துவமனை இயக்குனர் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
undefined
தமிழகத்தை முற்றுகையிடும் பாஜக தலைவர்கள்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 9 ஆண்டுகளை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்துள்ள நிலையில் நாடு முழுவதும் பாஜக ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து தலைவர்களிடமும் பொதுமக்களிடமும் எடுத்துரைத்து வருகிறோம். பாஜக தலைவர்கள் அரசியல் கட்சி சாராத முக்கியமானவர்களை அழைத்து பாஜக ஆட்சி குறித்து கருத்துகளை கேட்டறிந்து வருவதாக தெரிவித்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து வர உள்ளனர். ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கு செல்கின்றனர். அனைத்து பாராளுமன்ற தொகுதியிலும் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடத்தப்படும். வேலூரில் நீண்ட நாட்களாக தலைவர்கள் யாரும் செல்லாததால் அமித்ஷா அங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பிரதமர் வர உள்ளார்.
ஸ்டாலின் கேள்விக்கு இன்று பதில்
பாஜக மாநில நிர்வாகம் தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் கோவிலம்பாக்கம், வேலூரில் அமித்ஷா பங்கேற்பதாக தெரிவித்தார். பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்த திட்டங்களை பட்டியல் இட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், வேலூர் பொதுக்கூட்டத்தில் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து நான் பேசும் போது பதில் தெரிவிக்கப்படும். அதேப்போல், முதலமைச்சர் செய்யாதது குறித்து நாங்கள் கேட்கும் கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளிப்பார் என நம்புவதாக கூறினார். முதலமைச்சரின் பேச்சை பார்க்கும் போது பாஜக மீது முதலமைசருக்கு சிறிய பயம் ஏற்பட்டுள்ளதாக நான் பார்க்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் முதலமைச்சர் எதுவும் செய்ய்யாத காரணத்தினால் பாஜகவை நோக்கி கேள்வி கேட்கிறார் எனத் தெரிவித்தார்.
மின் வெட்டு- அரசியல் செய்ய விரும்பவில்லை
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது சென்னை விமானம் நிலையம் அருகே ஏற்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மின்தடை குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. தமிழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது. உள்துறை அமைச்சர் வரும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பிரச்சினையை மின்வாரியம் பரிசீலித்து கவனம் செலுத்தி அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்துறை அமித்ஷா வரும்போது எவ்வித அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடக்கூடாது சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என தெரிவித்தார்.
எடப்பாடியை சந்திக்காதது ஏன்.?
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்காதது தொடர்பாக விளக்க அளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சரின் தமிழக வருகை முழுக்க முழுக்க பாஜகவிற்கான நிகழ்ச்சி. கூட்டணி தலைவர்களுடனான சந்திப்புக்கு வாய்ப்பு இல்லையென அண்ணாமலை தெரிவித்தார். மின்தடை சாலை மறியலின்போது பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு பொதுமக்களை தாக்க கூடாது. நான் அரசு அதிகாரிகள் குறித்து தவறாக பேசக்கூடாது என பாஜக தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன். பொதுமக்களை தாக்கிய பாஜக தொண்டர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படியுங்கள்
தொண்டர்களை சந்தித்த அமித்ஷா! மின் இணைப்பு துண்டிப்பு! பொங்கிய பாஜகவினர் - மின் வாரியம் விளக்கம்