
அண்ணாமலை பாதயாத்திரை
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் பாதை யாத்திரையை மீண்டும் துவக்கினார் சேவூர் சாலையில் துவங்கிய இந்த பாதயாத்திரை பயணத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். தமிழகத்தில் நம்பர் ஒன் திருடன் என்றால் அதனை இந்து அறநிலையத்துறை என்று தான் குறிப்பிட வேண்டும் , பிரதமர் மோடி பொறுப்பேற்ற இந்த 9 ஆண்டுகாலத்தில் பல்வேறு நாடுகளுடன் போராடி 361 இந்திய மற்றும் தமிழக சிலைகளை மீட்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு
ஆனால் காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து மத்தியில் ஆட்சி அமைத்த திமுக எத்தனை களவு போன சிலைகளை மீட்டு வந்துள்ளது ? இதன் மூலமாகவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், இந்தியா முழுவதும் உள்ள பெண் தலைவர்களை அழைத்து வந்து மகளிர் உரிமை மாநாடு என நடத்தி இருப்பதற்காகவும் இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடி 33 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் தலைமுறை பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதாகவும் , குடும்ப அரசியலை நடத்தி வரக்கூடிய கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்காக அல்ல என தெரிவித்தார்.
பாஜகவிற்கு மீண்டும் வாய்ப்பு
இந்த மாநாடு நடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் சனாதனம் குறித்து பேசி இந்தியா முழுவதும் எதிர்வினையாக பிரபலமடைந்த உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியை கண்டு தானும் பிரபலமடைய வேண்டும் என கனிமொழியால் நடத்தப்பட்ட ஒரு மாநாடு எனவும் விமர்சித்தார். வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் பாஜகவிற்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்கள் என நம்புவதாக அண்ணாமலை கூறினார். முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை எனவும், சென்னிமலையில் கூடிய கூட்டமே அதற்கு உதாரணம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்