நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியா.? எடப்பாடி பழனிசாமி அறிக்கையால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Oct 17, 2023, 6:14 AM IST

ஜெயலலிதா மறைவிற்கு  பிறகு எதிரிகளும், துரோகிகளும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நின்று, அதிமுகவை  அழித்திடத் துடித்த நேரத்தில், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி கழகத்தை மீட்டு, வீறுநடை போடச் செய்திருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் அதிமுக கூட்டணி

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணியானது பிளவுபட்டது. இரு தரப்பும் தனித்தனியாக கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதனிடையே அதிமுகவின் 52 வது ஆண்டு விழாவையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

Tap to resize

Latest Videos

40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து வெல்லும் என கூறியுள்ளார்.    தீய சக்தியை அழித்தொழித்து தமிழ் நாட்டைக் காக்கும் புனிதப் போரில், 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களின் எழுச்சிமிகு பேராதரவோடு 17.10.1972 அன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை தோற்றுவித்தார்.

அதிமுகவின் சாதனை திட்டங்கள்

1977-ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஏழை, எளியோர் உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சித் தலைவர் தலைமையில் தமிழ் நாட்டில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டது. புரட்சித் தலைவர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, கழகத்தைக் கட்டிக் காத்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தொட்டில் குழந்தை திட்டம்; 69% இடஒதுக்கீட்டிற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு; அம்மா உணவகம்; மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணினி என்று எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து, தமிழ் நாட்டை “அமைதி, வளம், வளர்ச்சி” என்கிற கோட்பாட்டின்படி பீடுநடை போடச் செய்தார்.

"இன்னும் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் பணியாற்றும்"

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நின்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்திடத் துடித்த நேரத்தில், நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், என் உயிருக்கு நிகரான கழகத் தொண்டர்களின் பேராதரவோடும், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி கழகத்தை மீட்டு, வீறுநடை போடச் செய்திருக்கிறோம். புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட கழகம், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் “இன்னும் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் பணியாற்றும்" என்று பேரறிவிப்பு செய்யப்பட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில்,

திமுக ஆட்சியில் விலை வாசி உயர்வு

என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.கடந்த 29 மாத கால விடியா திமுக ஆட்சி, தமிழ் நாட்டின் உரிமைகளை காவு கொடுத்து மக்களின் வாழ்வை துயர் மிகுந்ததாக மாற்றிவிட்டது. மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு என்று மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எங்கெங்கு காணினும் கள்ளச் சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ வேண்டிய சட்டமன்றமே,

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி

ஜனநாயகத்தின் புதைகுழியாக மாற்றப்படுகிறது. ஒரு குடும்பம் தமிழ் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது. இந்தியத் திருநாடு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பி கழகம் தேர்தலை சந்திக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும் என்பதை நாம் அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அயராது பணியாற்றிட வேண்டும்.

திமுக அரசை வீழ்த்துவோம்

52-ஆவது ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், காவிரி உரிமையை காவு கொடுத்து, விவசாயிகளை அழிக்கத் துடிக்கின்ற; மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ள; சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, இந்த ஆளுமைத் திறனற்ற விடியா ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை எழுதிட நாம் அனைவரும் சூளுரை ஏற்போம்; வெற்றி காண்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சின்னத்தில் போட்டி? துரைவைகோ பரபரப்பு பேட்டி

click me!