தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட கேரள அரசு கொண்டு செல்ல தமிழக பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது. காலத்தினால் கைவிடப்பட்ட கம்யூனிஸ்ட்களும், திறமை இல்லாத திமுக அரசும், ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டு, கூட்டணி என்ற பெயரில் மௌனம் சாதித்து, தமிழகத்தின் இறையாண்மையை, நில வளத்தை பலி கொடுப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் நில அளவீடு
கேரள அரசின் நில அளவீடு செய்யும் பணியை தமிழக அரசு உரிய முறையில் தடுக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா அரசு டிஜிட்டல் நில அளவீட்டு திட்டம் “எண்டே பூமி” என்ற பெயரில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் நில அளவீடு செய்து, தங்களுடைய கேரளா மாநில எல்லைகளை தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருவதை, தமிழக அரசு அதிகாரிகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
வருவாய் பதிவு மற்றும் கணக்கெடுப்பு துறைகளின் தகவல்கள் மூலம், ஒரு புதிய டிஜிட்டல் தரவு தளத்தை கேரளா அரசு உருவாக்கி வருகிறது. கேரள அரசின் அறிவிப்பின்படி, புதிய கணக்கெடுப்பு வரைபடம் முடிவடைந்தவுடன், ஒவ்வொரு நபரின் நிலத்தின் அதிகாரப்பூர்வ பதிவு, கேரள எல்லைக்குள் சென்று விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.. 4ஆக பிரிந்துள்ள அதிமுக கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும்.. கோவை செல்வராஜ்..!
13 எல்லைகளில் நில அளவீடு
856.42 கோடி ரூபாய் செலவிலே, 1500 சர்வேயர்கள், மற்றும் 3200 உதவியாளர்கள், உட்பட 4700 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த கணக்கெடுப்பு திட்ட பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வயநாடு, காசர்கோடு, ஊட்டி, நாகர்கோயில், தென்காசி, பொள்ளாச்சி, கொடைக்கானல், குமிளி... உள்ளிட்ட 13 முக்கிய எல்லை நிர்ணய மண்டலங்களில் தீவிரமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டம் 1-11-2022 அன்று தேனி மாவட்ட எல்லையில் தொடங்கப்பட்ட நிலையில், 7-11-2022 அன்று தான், ஆழப்புழா மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட கடிதம் மூலம்,தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு, இந்தத் தகவல் உறுதியாகத் தெரிய வருகிறது.
இந்தச் செய்தியை மறுத்து, 10-11-2022 அன்று, தமிழ்நாடு வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட செய்தி குறிப்பில், “கேரள எல்லையில் டிஜிட்டல் முறையில் நில அளவை எதுவும் செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார். ஆனால் எல்லைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் நில அளவை நடப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் கேரள அரசு தங்கள் எல்லைப் பலகைகளை மாற்றி அமைப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கண்ணகி கோயில் ஆக்கிரமிப்பு
17-11-2022 அன்று நாகர்கோவில் மாவட்டம் ஆனைக்கல் பகுதியிலும், மற்றும் தேனி மாவட்டம் பாப்பம்பாறை பகுதியிலும், கேரளா அரசு, தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், சுமார் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கையகப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கேரள அரசின் இந்த அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியாகும்.
இடுக்கி, தேனி எல்லையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க, மங்களதேவி கண்ணகி திருக்கோவிலின் நிர்வாகத்தின் தமிழக உரிமைகளில், கேரள அரசு ஏற்கனவே தலையிடுகிறது. மேலும் திருவிழா நாட்களை மூன்று நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைத்து உள்ளது. திருக்கோவில் திறக்கும் தரிசன நேரத்தை 10 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக, கேரள அரசு குறைத்து உள்ளது. தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கும் கோவிலில், கேரள அரசின் தலையீட்டை தமிழக அரசு இதுவரை தடுக்கவில்லை. தமிழ் மகள் கண்ணகி திருக்கோயிலை பாதுகாக்க தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக முன்னாள் எம்பிக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்
தேசிய பதவி கனவில் ஸ்டாலின்
காலத்தினால் கைவிடப்பட்ட கம்யூனிஸ்ட்களின் தயவைக் கொண்டு, தன்னுடைய தேசிய பதவிகளுக்கான கனவுகளுக்காக, தமிழக முதல்வர் கண்மூடிக் கொண்டு கேரள அரசின் அத்துமீறல்களை அனுமதிக்கிறார். பினராயி விஜயனின் நட்பை புதுப்பித்துக் கொண்டு, மலையாளத்திலே பேசி, தமிழக நிலங்களை, மக்கள் நலங்களை காவு கொடுத்து, பதவி ஆசைக்காக மௌனம் காக்கிறார். திறமை இல்லாத திமுக ஆட்சியின், அவலத்தின் உச்சமாக, கேரள அரசு நில அபகரிப்பு செய்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு திமுகவிற்கு உண்டு. ஆனால் இனியும் அதைத் தொடர தமிழக பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது.
பாஜக போராட்டம்
விரைவில் எல்லைப் பகுதிகளில், தமிழகத்தின் நலன்களையும், தமிழக விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பதற்காக, நானே நேரிலே சென்று ஆய்வு செய்வேன். தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட கேரள அரசு கொண்டு செல்ல தமிழக பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது. காலத்தினால் கைவிடப்பட்ட கம்யூனிஸ்ட்களும், திறமை இல்லாத திமுக அரசும், ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டு, கூட்டணி என்ற பெயரில் மௌனம் சாதித்து, தமிழகத்தின் இறையாண்மையை, நில வளத்தை பலி கொடுப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆகவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, இது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல், மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழக எல்லையை மீட்பதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்