பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பவர் போல் பேசுவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்த நிலையில், மீடியா வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லையென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி கடந்த 5 வருடமாக தொடர்ந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இதனை தொடர்ந்து பாஜக இல்லாத கூட்டணியை உருவாக்க அதிமுக திட்டம் தீட்டி வருகிறது. இந்தநிலையில் தற்போது பாஜக மற்றும் அதிமுகவினர் வார்த்தைகளால் மோதிக்கொள்ளும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அண்ணா மற்றும் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை தவறாக பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலர் கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை என விமர்சித்தார்.
லேகியம் விற்பவர் போல் பேசுகிறார்
தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசி கொண்டிருக்கிறார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது என காட்டமாக தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்க அண்ணாமலையும் பதில் அளித்துள்ளார். நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்காதது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்தவர், தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய அரசு 1,300 கோடி ரூபாய் கொடுத்திருப்பதை எடுத்து செலவு செய்யாமல் வைத்துள்ளனர். தமிழக அரசு கேட்டுள்ள 38 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் என கூறினார்.
ஆர்.பி உதயகுமார் செல்லாக்காசு
இதனை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர். செல்லாக்காசாக இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. மீடியோ வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பணத்தை கொள்ளையடித்து ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளின், தாரக மந்திரம் எல்லாம் எனக்கு தெரியாது. கடுமையான வார்த்தைய பயன்படுத்த எனக்கும் தெரியும். ஆனால் அதற்கு அவசியம் இல்லையென அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்