
தமிழகத்தில் யார் எதிர்கட்சி?
திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில், திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதன் காரணமாக திமுக- பாஜக இடையே வார்த்தைப்போர் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் யார் எதிர்கட்சி என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜக தனது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல என கூறினார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாஜகவின் அணுகுமுறையை சமூக ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் கேட்டுக்கொண்டார்.இதற்கு பதில் அளித்த பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் அதிமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை என தெரிவித்தவர், அதிமுக 67 சட்டமன்ற உறுப்பினர் வைத்து கொண்டு எதிர்கட்சியாக சரியாக செயல்பட வில்லை, ஆனால் 4 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்து கொண்டு பாஜக எதிர்கட்சியாக அனைத்து கேள்விகளையும் முன் வைக்கிறது என கூறினார். எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வலுவாக செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். இரை போட்டால் கூட்டம் வரும். தீர்ந்தால் பறந்துவிடும் என தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்து அதிமுக- பாஜக கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவை வீழ்ச்சி-பாஜக வளர்ச்சி ?
இதனையடுத்து இன்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து தனிப்பட்ட கருத்து இதற்கு பதில் அளிக்க தேவையில்லை என கூறினார்.தமிழகத்தில் அதிமுகவை அழித்து தான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் இல்லையென தெரிவித்தவர், 70 % பேர் திமுகவை எதிர்த்து தான் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். எனவே பாஜக தமிழகத்தில் வளர்வதற்கு பெரிய அளவில் இடம் உள்ளதாக கூறினார். தமிழகத்தில் தேசியத்திற்காக ஓட்டு போட்ட 20% மக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுகவை தள்ளிவிட்டு தான் பாஜக வளரனும் என்ற முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் கூறினார். அந்த நோக்கம் இல்லையெனவும் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இரண்டு கட்சிகளும் தயாராகி வருவதாக தெரிவித்தார். அதில் எந்த குழப்பமும் இல்லையென உறுதிபட கூறினார்.எனவே அதிமுகவை பொறுத்தவரை தோழமை கட்சியை தாண்டி 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் முக்கியமான திட்டங்களுக்கு எல்லாம் ஆதரவு கொடுத்து வருகிறது. எனவே பாஜகவினர் யாரும் தனிப்பட்ட முறையில் அதிமுகவை விமர்சித்து பேசக்கூடாது என கூறினார். மாநில தலைமை அறிவுறுத்தல் இல்லாமல், பாஜக மீடியா சென்டர் அனுமதியில்லாமல் யாரும் அதிமுகவை விமர்சிக்க கூடாது என திட்டவட்டமாக அண்ணாமலை தெரிவித்தார்.
அதிமுகவை விமர்சிக்க கூடாது
அதிமுகவுடன் எந்த குழப்பமும், சச்சரவு இல்லையென தெரிவித்தார். இதே போல அதிமுகவில் யாரேனும் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அந்த கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல , பாஜகவை முதலிடம் கொண்டு வர வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான் எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும் என தெரிவித்தார். குறு சிறு நிறுவனங்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். எனவே லூலூ மால் இங்கு தேவை கிடையாது. பீகார் , உத்தரபிரதேசத்துக்கு வேண்டுமானால் அந்த நிறுவனம் தேவைப்படலாம். லூ லூ வந்தால் அண்ணாச்சி கடைகள் கூட காணாமல் போய்விடும் என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்