
காங்கிரஸ் கட்சி என்பது ஒரு பல்லே இல்லாத பாம்பு, அவர்களின் கட்சி பிரச்னையை பார்க்காமல் பாஜக அதிமுக கூட்டணி பற்றி பேசுகின்றனர் என்று போட்டு தாக்கி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
ஜனவரி 12ம் தேதி…. 11 மருத்துவக் கல்லூரி… தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக வரும் 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பாஜகவுக்கு எதிராக கடுமையான அரசியல் நிலைப்பாட்டில் இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் அமைந்த பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி வருவதால் இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமரின் வருகையை எதிர்ப்பதா? ஆதரவு தருவதா? என்று தெரியாமல் திமுகவின் கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. அவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரதமர் எதிர்ப்பு என்று பேசிவிட்டு, இப்போது ஆளுங்கட்சி என்ற நிலையில் ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜகவினர் தயாராகி வருகின்றனர். இந் நிலையில் கள்ளக்குறிச்சியில் மாநில பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கள்ளக்குறிச்சி வந்திருந்தார் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பேரிடர் நிதியில் தமது பங்கை மாநில அரசு தரும் முன்பே தமிழகத்துக்கு மத்திய அரசு தமது பங்கு நிதியை தந்துள்ளது. தமிழகம் கேட்கும் முன்பே மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை தான் பாஜகவும் கூறி வருகிறது. திமுக எம்பி டி.ஆர். பாலுவும் இதைத்தான் கூறுகிறார். ஆனால் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரமுடியாது என்கிறார். இப்படி திமுக இரண்டுவிதமாக கருத்துகளை கூறி மக்களை குழப்பம் அடைய வைக்கின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி, புதிய மருத்துவக் கல்லூரிகள் என பல திட்டங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அதனால் தான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முதலிடத்தில் இருக்கிறது. இதற்கான முழு காரணமும் மத்திய அரசு தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளில் மட்டும் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக, அதிமுக கூட்டணி நன்றாகவே உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ அவர்கள் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பிரச்னையை பற்றி பார்க்காமல் பேசுகின்றனர்.
கண்ணாடி கூண்டில் உட்கார்ந்து கொண்டு கல்லை வீசி வருகின்றனர். தமிழக அரசியலை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு பல் இல்லாத பாம்பு என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.