
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்திய பிரதமர் ஆக முடியுமென்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராக முடியாது என திருமாவளவன் பேச்சுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த 26ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தொல்.திருமாவளவன்;- சனாதன சதிக் கூட்டத்திடமிருந்து தமிழ்நாட்டை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதேபோல 2024- இல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் முன் முயற்சியை எடுக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் நிலை என்னவாகும்? இதை நினைக்கும்போதே எனக்கு அச்சமாக உள்ளது.
அப்படி ஒரு நிலை வராமல் தடுப்பதற்கான ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது. தேசிய அரசியலில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இவர்களின் அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் நீங்கள் தேசிய அரசியலில் பயணம் செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த திருமாவளவன்;- பிரதமர் வேட்பாளராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த மோடி தற்போது பிரதமராக உள்ளார். அவர் தற்போது இந்தியாவை ஆளும் போது ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமராக இருந்தால் ஆட்சி செய்ய முடியாதா? நிச்சயம் முடியும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருமாவளவனின் இந்த பேச்சுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய பிரதமர் ஆக முடியுமென்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏன் பிரதமராக முடியாது? : தொல். திருமாவளவன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். தவறில்லை. ஆனால், அவர் ஒரு தேசியவாதியாக இருக்க வேண்டும்.
பிரிவினைவாத தீய சக்திகளுடன் கூட்டணி வைக்க கூடாது. அவர்கள் இந்த தேசத்தை நேசிக்க வேண்டும். இந்த கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். ஊழல் சிந்தனையற்று இருக்க வேண்டும். தேச விரோத தீய சக்திகளோடு உறவு கொள்ளாது இருக்க வேண்டும். மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தை வெறுக்காது இருக்க வேண்டும்.
பெரும்பான்மை ஹிந்துக்களின் வாழும் முறையான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க முடியாது. இவை அனைத்தும் திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் அவர்களிடத்தில் இல்லை. அதனால் ஸ்டாலின் அவர்கள் பிரதமராக முடியாது. எல்லாவற்றிக்கும் மேலாக நரேந்திர மோடி அவர்களை தவிர பிரதமராக யாரையும் ஏற்க இந்திய மக்கள் தற்போது தயாராக இல்லை என பதிவிட்டுள்ளார்.