மக்கள் அனைவரும் திமுகவினர் போல் செல்வந்தர்கள் அல்ல... பத்திர பதிவு கட்டண உயர்வுக்கு எதிராக சீறும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Dec 15, 2023, 8:38 AM IST

பத்திரப்பதிவில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு, வீட்டுமனைகள் விற்க முடியாமல் தவித்துவரும் தங்களுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு மறைமுகமாக உதவ முயற்சிக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


பத்திர பதிவு கட்டணம்

அடுக்குமாடி கட்டிடத்திற்கான பத்திர பதிவு கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக விலையேற்றம் ஒன்றை மட்டும் மூன்று மாத இடைவெளியில் மக்களுக்கு பரிசாக வழங்கி வந்துள்ளது. சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வை தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை 2 சதவீதம் குறைத்த கையோடு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை (Guideline Value) 33 சதவீதமும் முத்திரைத்தாள் கட்டணத்தை 10 மடங்கும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்த்தியது ஊழல் திமுக அரசு.

Latest Videos

undefined

மக்கள் மீது சுமையை வைக்கும் திமுக அரசு

மக்கள் மீது வரி ஏற்றம் என்ற சுமையை சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது ஊழல் திமுக அரசு. எதற்காக இந்த வரியேற்றம் என்ற எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எந்த ஆலோசனையும் இல்லாமல், இந்த மாதம் முதல் வாரத்தில் வரியேற்றத்திற்கான ஒரு அரசாணையை வெளியிட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஊழல் திமுக அரசு. அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்கள் பதிவு - கூட்டுமதிப்பு நிர்ணயம் செய்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் பகுதிவாரியாக அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனையின்போது

தற்போது உள்ள நடைமுறையான யுடிஎஸ் அளவில் விற்பனை விலையின் மீது போடப்படும் பத்திரப்பதிவு கட்டணம் என்ற செயல்முறையை நீக்கி கூட்டு மதிப்பு விலை என்ற புதிய செயல்முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சென்னையின் பிரதான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வழிகாட்டி மதிப்பு மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு 16,000 ரூபாய் Basic Composite Value என்றும் 18,000 ரூபாய் Premium Composite Value என்றும் 22,000 ரூபாய் Ultra Premium Composite Value 660MILD வகைப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு 20 அடி சாலை, 50 அடி சாலை என, சாலையின் அகலத்தின் அடிப்படையில் ஒரு பகுதியின் முன்னேற்றம் மற்றும் அதன் அடிப்படையில் வழிகாட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு கட்டணம் என்ன.?

ஆனால் தற்போது இந்த நடைமுறையை களைந்து, ஒட்டு மொத்த பகுதிக்கும் ஒரே அளவு வழிகாட்டி மதிப்பு என்பது எப்படி நியாயமான நடைமுறையாகும்? சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரே பகுதியில், சாலை வசதி, குடியிருப்பு வசதி, சுற்றுசூழல், அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய நிறுவனம் வழங்கும் வசதிகள் ஆகியவைற்றை அடிப்படையாக கொண்டே ஒரு வீட்டின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒரு சதுரடிக்கு 8,000 முதல் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கு வழிகாட்டு மதிப்பை 100 முதல் 150 சதவீதம் உயர்த்தியதன் விளைவு, பத்திரப்பதிவு கட்டணம் 100 முதல் 150 சதவீதம் உயர்ந்துள்ளது.

தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்கள், இந்த புதிய நடைமுறையால் வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவார்கள். மேலும், இந்த உயர்த்தப்பட்ட வழிகாட்டு மதிப்பின் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்காமல் மக்கள் வீட்டுமனைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆதலால், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான பத்திரப்பதிவில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு, வீட்டுமனைகள் விற்க முடியாமல் தவித்துவரும் தங்களுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு மறைமுகமாக உதவ முயற்சிக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

பழைய பத்திர பதிவு கட்டணே வசூலிக்கனும்

பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள், ஒன்றை உணர வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் போல செல்வந்தர்கள் அல்ல. முறைகேடாக சம்பாதிப்பவர்களும் அல்ல. இப்படி மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மக்களின் உழைப்பை சுரண்டும் வகையில் செயல்பட்டு வருவதை பத்திரப் பதிவுத்துறை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும், இந்த புதிய கூட்டுமதிப்பு முறையை உடனடியாக கைவிட்டு, முன்பு போலவே பழைய பத்திரப்பதிவு கட்டண முறையிலேயே வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

வெள்ள நிவாரணம் டோக்கன் இன்று முதல் விநியோகம்! ரூ.6000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு! தொடங்கி வைக்கும் முதல்வர்!

click me!