நூதன முறைகளைக் கையாண்டு முறைகேடு செய்த இவர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், இவர்கள் கண்முன்னே சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்த பின்னரும், எந்த தைரியத்தில் மலைமுழுங்கிகள் இது போன்ற முறைகேடுகளைத் துணிந்து செய்ய முற்படுகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆவின் முறைகேடு- அண்ணாமலை
ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒவ்வொரு துறைகளிலும் முறைகேடுகள் வெளிப்படையாகவே நடக்கின்றன. குறிப்பாக, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே பால்வளத் துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாகவே இருந்து வருகிறது. அளவுக்கதிகமான முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக, பால்வளத் துறை அமைச்சராக இருந்த திரு. நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்றார். இவருக்கு அவரே பரவாயில்லை என்ற அளவில் பால்வளத் துறையின் நிலை தற்போது மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது.
undefined
பால் கொள்முதல் குறைவு
மலைமுழுங்கி என்று பெயரெடுத்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், பால்வளத் துறையில் இருக்கும் வளத்தை மட்டுமே பார்த்திருக்கிறார். பாலையும், துறையையும் முழுவதுமாகக் கைவிட்டு விட்டார். பாலின் கொள்முதல் விலையை உயர்த்தாமல், உற்பத்தியாளர்களை எல்லாம் தனியார் பக்கம் திருப்பி விட்டுவிட்டு, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவைக் குறைத்த அமைச்சர், அடுத்ததாக, பிற மாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு பால் பவுடர் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்யத் தொடங்கினார். பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவைக் குறைத்து, தரத்தையும் குறைத்து, பால் பாக்கெட் நிறத்தை மட்டும் மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், பொதுமக்கள் மீது விலை உயர்வைச்சுமத்தியிருக்கிறார்.
இதனால், பொதுமக்கள் ஆவின் நிறுவனப் பால் வாங்குவது குறைந்து, தனியார் நிறுவனங்களின் பால் வாங்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மொத்தமாக முடக்கி, தனியார் பால் நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியாகவே, அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் தெரிகின்றன. இவை அனைத்துக்கும் உச்சமாக, ஆவின் நிறுவனப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் நிறுவனம் ஒன்றை, தனக்கு வேண்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு துணை ஒப்பந்தம் வழங்குமாறு அமைச்சரின் உதவியாளர் ஒருவர் நிர்ப்பந்தித்ததாக, அந்த நிறுவனம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஆவின் நிறுவனம் அறிவித்த ஒப்பந்தம் எண் 11218/Proj.3/2023-3 - அம்பத்தூர் ஆவின் பால் உற்பத்தி மையத்தில்,
பால் பாக்கெட் உற்பத்தி தானியங்கி அமைப்புக்கான ஒப்பந்தம், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 'Introcon Conveyor Systems' என்ற நிறுவனத்துடன் ஏற்பட்டு, பின்னர் அந்த நிறுவனத்தை, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த M/s. Raghavendra Automation Pvt. Ltd என்ற நிறுவனத்துக்குக் துணை ஒப்பந்தம் வழங்க, அமைச்சரின் உதவியாளர் வலியுறுத்தினார் என்று, ஆவின் நிறுவன நிர்வாக இயக்குனருக்கு, கடந்த அக்டோபர் 28 அன்று, அந்த நிறுவன இயக்குனர் மின் அஞ்சலில் புகார் அனுப்பியுள்ளார்.
சென்னை நிறுவனத்துக்கு துணை ஒப்பந்தம் வழங்கவில்லை என்றால், மொத்த ஒப்பந்தத்தையுமே ரத்து செய்து விடுவோம் என்றும் அமைச்சரின் உதவியாளர் மிரட்டியதாக அந்த மின்னஞ்சலில் அவர் தெரிவித்திருக்கிறார். தங்களுக்கு விருப்பமே இல்லாமல், ஆவின் நிறுவனம் வெளியிட்ட டெண்டரில் பங்கேற்க்க சென்னை நிறுவனத்துக்கு அங்கீகாரக் கடிதம் கொடுக்கக் கட்டாயப்படுத்தினர் என்றும் அவர் கூறியிருக்கிறார். திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் இது. அரசு நிறுவனப் பணிகளை, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க, ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்வது, ஒப்பந்த நிறுவனங்களை மிரட்டுவது என ஒவ்வொரு நாளும் திமுகவின் முறைகேடுகள் எல்லையற்றுச் சென்று கொண்டிருக்கின்றன. ஆவின் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் திசை மாறி, திமுக பணம் சம்பாதிக்க உதவும் மற்றொரு அரசு நிறுவனமாக முடக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறைகளிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பது வெளிப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் முதலமைச்சரின் மகனும் மருமகனும் முப்பதாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்ததின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக தெரிய வருகின்றன. ஏற்கனவே, இது போன்ற நூதன முறைகளைக் கையாண்டு முறைகேடு செய்த இவர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர்,
இவர்கள் கண்முன்னே சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்த பின்னரும், எந்த தைரியத்தில் மலைமுழுங்கிகள் இது போன்ற முறைகேடுகளைத் துணிந்து செய்ய முற்படுகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. தவறு செய்தவர்களுக்கான தண்டனைகள் சிறிது காலம் தள்ளிப் போகலாம் ஆனால் தப்பித்து விட முடியாது என்பதனை, மக்கள் பணத்தை விதவிதமாகத் திருடும் திமுக கூட்டம் வெகு விரைவில் உணரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்